பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

வருங்கால மானிட சமுதாயம்


என்று கனவு கண்டான்; கண்ணாடி வணிகரோ அனைத்து கண்ணாடிப் பலகணிகளையும் உடைத்து நொறுக்கிச் சென்ற பனிப்புயலைக் கண்டு களிப்படைந்தான்; அறங்கூறவையோ மிகுதியான குற்றங்கள் நடக்க வேண்டும் என விரும்பியது.

மக்களின் ஒழுக்க வடிவம் தாறுமாறாக இருந்தது. தன்னகச்செருக்குதான் அங்கு மேலோங்கிய குணமாக இருந்தது; பொதுவாக , மண வாழ்வில் காதலும் இருக்க வில்லை. செயின்ட்-சைமனைத் தொடர்ந்து, போரியரும் சுமுதாய உரிமையைப் பெண்களுக்குள்ள விடுதலையின் அளவைக் கொண்டு தான் அளந்து பார்க்க வேண்டும் என்று அறிவித்தார்.

போரியர், செயின்ட் - சைமன், ஓவென் ஆகியோர் முதலாளிய பொருளாயத்தின் நன்மைத் தீமைகளை வெளிப்படுத்தினர்; அதில் ஆட்சி செலுத்திய அட்டுழித்தையும், போரியர் குறிப்பிட்டபடி அந்தப் பொருளியலில் நிலவும் நெருக்கடிகளான "மிகுதி நெருக்கடிக" ளையும் வெளிப்படுத்தினர். முதலாளிய சமுதாயத்தின் அறிவுக்கு ஒவ்வாத் தன்மையை விவரிக்கும் போது, முதலாளியத்தின் கீழ் ஆக்கத் துறையில் எந்திரங்களைப் புகுத்திய தன்றன் தொழிலாளர்களின் உழைப்பை எளிதாக்குவதற்கு மாறாக, அதனை இழிவு படுத்தத்தான் செய்தது என்று ஓவென் எழுதினார். ஐம்பதாண்டுகட்கு முன்னால் அறுபதாயிரம் பேர் பெருக்கம் செய்த அதே அளவை இப்போது இரண்டாயிரத்து ஐந்நூறு தொழிலாளர்கள் பெருக்கம் செய்தனர்; ஆனால் இந்த வேறுபாட்டை ஆக்கம் என்ற வடிவில் ஆலை முதலாளிகளும் தொழிற்சாலை உடைமையாளர்களும் பறித்துக் கொண்டு விட்டனர். தொழிலாளிகளைப் பொறுத்த வரையிலோ, அவர்கள் விளைவு செய்த செல்வம் அவர்களுக்கு இழப்பையும் துன்பத்தையும்தான் கொண்டு வந்தது.