பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

29



19ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் கனவுலகச் சமண்மைக்கு முந்நூறு ஆண்டுகள் அகவையாகியிருந்தது. மேலும் அந்த சமண்மையர்கள் நடப்பில் உள்ள நிலைமைகளை திறனாய்வு செய்து, ஒரு குறிக்கோள் சமுதாயத்துக்கான திட்டங்களை வரைந்து காட்டிய அதே சமயத்தில், அவர்கள் நல்லொழுக்க அறிவுரையும் செய்ய முனைந்து விட்டனர். பழமை நல்லொழுக்கத்துக்கு எதிரானதென்றும் அறிவித்தனர். சில சமயங்களில் அவர்கள் நல்லொழுக்கத்துக்குத் துணையாக அழகியல் முறையான கண்டனத்தையும் தெரிவித்தனர்; அதன் மூலம் குறிக்கோள் சமுதாயத்தின் இன்றியமையாமையை அழகியல் நிலைகளிலிருந்தும் ஆதரித்தனர். நல்லொழுக்கத் தேவைகள், அழகியல் தேவைகள் ஆகிய இரண்டுமே மாந்த இயல்பிலிருந்து தோன்றுவதாகக் கருதப்பட்டன.

19ஆம் நூற்றண்டின் மாபெரும் கருத்தியல் வாணர்கள் சமுதாயத்தின் சமண்மை மாற்றத்துக்கான தமது திட்டங்களை, பணம் படைத்தோரிடமிருந்து பெறும் பொருளாயத உதவியோடு கூடிய கருத்துப் பரப்புதலின் மூலமே நிறைவேற்றிவிட முடியும் என்று நம்பினர். இந்தக் கருத்துகளெல்லாம் முறையானவை யென்றும் என்றும் மாந்த இயல்புக்குப் பொருத்தமானவை என்றும் திண்ணமாகக் கருதினர். மக்கள் இவற்றுக்குச் செவி சாய்க்காமல் இருக்க முடியாது என்றும் அவர்கள் உணர்ந்தனர். போரியரும் செயின்ட்சைமனும் தமது கனவுலக சமுதாயத்தில் முதலாளிகளுக்கும் வங்கியாளர்களுக்கும் ஒரு தனித்தொரு இடத்தைக் கூட ஒதுக்கி வைத்திருந்தனர்; அவ் இடத்தில் அவர்கள் உழைக்கும் கட்டாயத்திலிருந்து விடுபட்டு தமது தனியார் உடைமை உரிமையோடு இருக்க முடியும்.