பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வருங்காலம்


லக்கணத்திலும் வரலாற்றிலும் வேண்டுமானால் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பகுத்துப் பார்க்கலாம். ஆனால் வாழ்க்கையில் நிகழ்காலம் மட்டுமே உள்ளது. ஒவ்வொரு கணமும் நாழிகையும் பொழுதும் நாளும் நிகழ்காலத்தை நிறுத்துவதாகும். எனவே கடந்த காலம் என்கிறோம். நாளை என்பது நம் கையில் இல்லை எனவே எதிர் காலம் என்கிறோம்.

காலம் ஒரு பேராறு. அது ஒடிக் கொண்டே இருக்கிறது. வாழ்வும் அப்படியே. சிறு புல் முதல் மூதாலம்வரை, சின்னஞ்சிறு புழு முதல் பென்னம் பெரிய யானை வரை ஒவ்வொன்றுக்கும் முக்காலமும் உண்டு. ஆனால் அவை எவையும் காலத்தை அறியா - இயற்கையின் அறுபருவத் திருக்கூத்தினை எவ்விதத் தூண்டுதலுமின்றி ஆடிப்பாடி கழிக்கின்றன.

மனிதன் மட்டுமே மனத்தால் முக்காலமும் உணர்கிறான். அதில் எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்று அவன் பட்டறிவும் படிப்பறிவும் உணர்த்துகின்றன. அறிவியல் அவனின் முன்னேற்றத்தின் படிக்கல்லாக உதவுகிறது. எனவே எதிர்காலக் கனவுகள் குவிகின்றன. அவற்றை செயற்படுத்தி 'யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற மெய்ம்மைக்கு பயணம் செய்கிறான். அதன் விளைவே இந்நூல். மக்கள் பயன் கொள்க.

அன்பன்
த. கோவேந்தன்