பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 து ஐ உரிமை | காணப்பட்டது. பின்னால் வெளி உலகில் எங்கும் நிறைந்து கவிந்து கிடந்த காரிருள் அதன் மூர்க்கத்தன்மையை அதிகப்படுத்திக் காட்டியது. இருட்டில் வேறு யாராவது நின்றார்களா - எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் - இது எதுவும் உள்ளே அஞ்சிக் கிடந்த இரண்டு பேருக்கும் தெரியாது. அதைத் தெரிந்துகொள்ள அவர்கள் ஆசைப்படவுமில்லை.

முன்னால் ஆஜராகி நின்ற ஒருவனே அவர்களைச் சாகடிக்கும் சக்தி பெற்றவனாக இருந்தான். அவனுடைய சக்தியைவிட அதிக வலு உள்ளதாக இருந்தது அவர்களுக்குள்ளிருந்து அவர்களை ஓயாது அரித்துக் கொண்டிருக்கும் பயம் எனும் உணர்வு.

அவன் அவர்களையே பார்த்து நின்று பல்லைக் காட்டினான்.

பற்களைக் காட்டிக்கொண்டு, பயமில்லாமல், எதற்கும் துணிந்துவிட்ட தோற்றத்தோடு முன்னேறுகிற வெறிநாய் மாதிரித்தான் அவனும் நடந்து கொண்டான். அவன் முகத்தைப் பார்ப்பதற்கே பயமாக இருந்தது. அவன் என்ன செய்வானோ என்ற திகைப்பும், அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான் எனும் நினைப்பும் அவளை உலுக்கின. அவள் தன் கணவன் பக்கம் நகர முயன்றாள். அவனோடு சேர்ந்து இருந்தால் சிறிது தைரியம் ஏற்படாதா என்ற ஆசைதான் காரணம்.

அவர்களை மாறி மாறிப் பார்த்துக்கொண்டே மெதுவாக முன்னால் அடி எடுத்து வைத்த வெறியன் கத்தினான். "ஏய் நகராதே யாரும் நகரக் கூடாது. கையைத் காலை அசைத்தீர்களோ, அவ்வளவுதான்' - -

அவனது வெறும் அதட்டலே அவளைத் தரையோடு தரையாக ஒட்டிக்கொள்ளச் செய்யும் வன்மை பெற்றிருந்தது. அவள் உடல் நடுங்கியது. உள்ளம் பதைபதைத்தது.

அவளையே வைத்த கண் வாங்காது கவனித்தான் அவ்வெறியன், அவன் உள்ளத்தில் தீய எண்ணம் கிளர்ந்தெழுந்தது என்பதை அவனுடைய கண்களில் பளிச்சிட்ட புதிய ஒளி காட்டிக் கொடுத்தது. தனது பருமனான உதடுகளை அவன் நாவினால் தடவிக் கொண்டான். அவளை நெருங்க நகர்ந்தான். - -