பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை தமிழில் சிறுகதைத் துறை வளமாக, வனப்புடனும் வலி மையோடும் புதுமைப்பொலிவோடும் வளர்ந்துள்ளது.

சிறுகதை அப்படி செழித்து வளர்வதற்கு பத்திரிகைகள் பெரும்பங்கு ஆற்றியுள்ளன. முக்கியமாக சிற்றிதழ்கள். -

தமிழ் இதழியல் வரலாற்றில் தனக்கெனத் தனிஇடம் அமைத்துக் கொண்டுள்ள சரஸ்வதி இதழ் சிறுகதை வளர்ச்சிக்கும் நல்லமுறையில் தொண்டாற்றியிருக்கிறது. ஒரு அர்ப்பணிப்பு உணர்வுடன் சரஸ்வதி இதழை எட்டு ஆண்டுகள் நடத்திய நண்பர் வ. விஜயபாஸ்கரன். முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்குத் துணைபுரிந்தார். அத்துடன் இலக்கியத்தின் பலவிதம்ான முயற்சிகளுக்கும், சோதனைகளுக்கும் வரவேற்பு அளித்தார். படைப்பாளிகளுக்கு சுதந்திரம் அளிக்கவும் அவர் தயங்கவில்லை.

அதனால், வகை வகையான-புதுமையான சிறுகதைகள் மலர்ந்து மணம் பரப்பக் கூடிய இனிய நந்தவனமாக "சரஸ்வதி விளங்கியது.

"சரஸ்வதி'யில் கட்டுரைகள், உதிரிப்பூக்கள். நாவல் சுருக்கம், நூல் மதிப்புரை, சுவையான துணுக்குகள் என்றெல்லாம் எழுதிய நான் விதம் விதமான சிறுகதைகளையும் எழுதினேன். வாழ்க்கையின் யதார்த்தங்களையும், மனிதரின் பலவித இயல்புகளையும் செயல்பாடுகளையும், நடை நயத்தோடும் கற்பனைப் பூச்சோடும் ரசமான கதைகளாக எழுதிவந்தேன்.

"சரஸ்வதி"யில் வெளிவந்த எனது சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து நல்ல முறையில் புத்தகமாக இப்போது பிரசுரிக்கிறது பாவை பதிப்பகம்.

என் சிறுகதைக்ளை வெளியிட்ட "சரஸ்வதி" இதழ் ஆசிரியர், நண்பர் விஜயபாஸ்கரன் அவர்களுக்கும், அவற்றை தேர்ந்தெடுத்து தொகுப்பாக வெளியிடும் பாவை பதிப்பகத்தாருக்கும் என் நன்றி உரியது. - வல்லிக்கண்ணன்