பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன்

அவர்களை நோக்கி எங்கிருந்தோ சில கற்கள் வந்து விழுந்தன. அவ்வளவுதான் தடியடியும், துப்பாக்கிப் பிரயோகமும் பயங்கர ஆட்சி புரிந்தன. கும்பலாக நின்று வேடிக்கை பார்த்தவர்கள் சிதறி ஓடினர். கடைவீதியில் மண்டை பிளந்து சிலரும், குண்டு அடிபட்டுச் சிலரும் ரத்தம் சிந்திக்கிடந்தனர். - -

கோயில் சூரசம்காரத்திலே அகரத் தாய் அலறி அடிக்கும் கட்டம் துவங்கியிருந்தது. அதே கணத்தில் கடைவீதியில் ஒரு பெருங் கூச்சல், நெஞ்சை அறுக்கும் தொனியாய், பொங்கி எழுந்தது. "என்னைப் பெத்த ராசா எம் மகனே போயிட்டியே ஐயோ! என்ற ரீதியில் புலம்பலும் மாரடிப்பும் விம்மி வெடித்தன. -

தரித்திர உருவினள் ஒருத்திதான் அப்படிக் கத்தினாள். அவள் பெத்த ராசா கட்டையாய் - சவமாய் - கிடந்தான் ரத்தம் சிந்திக் கிடந்தான். குண்டு அடிபட்டுச் செத்துக் கிடந்தான். கண்ணை அறுக்கும் - நெஞ்சைக் குத்தும் தோற்றம் அது. -

அந்தத் தாயின் உணர்ச்சி மிகுந்த ஒலம் கடைவீதி நெடுகிலும் ஒலித்தது. அடுத்த வீதியிலும், அதற்கு அப்பாலும் ஒலித்தது. ஊரின் மூலைக்கு மூலை எட்டியது. -

தன் மகனை இழுத்து மடிமீது கடத்திக் கொண்டு - யாராலும் தேற்ற முடியாத சந்திரமதிபோல - ஒலமிட்டு அழுதாள் அந்தத் தாய். மார்பில் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டு, மண்டையைத் தரைமீது "நங்கு நங்கென்று" மோதிக்கொண்டு அழுதாள் அவள். தனது கண்ணுக்குள் கண்ணாக - உயிரினும் சிறந்த உயிராக தன் வாழ்வின் வாழ்வாக வருங்காலத்தின் நம்பிக்கையாக மதித்திருக்கும் ஒரு மகனைப் பறி கொடுத்த தாய் உள்ளம்தான் அத்தகைய வேதனைகளை துயர அனுபவங்களை - தனக்குத் தானே விதித்துக் கொள்ளமுடியும். -

அவளது சோகப் புலம்பல் ஆற்ற முடியாத துயர அனுபவம் எல்லோர் உள்ளத்தையும் தொட்டது. ஊரே திரண்டு விட்டது. கோயில் சூரன்குத்து விளையாட்டு அர்த்தமற்றதாய், வேடிக்கை இல்லாததாய் -சப்பென்று-போய்விட்டது. -

கடைவீதி நிகழ்ச்சியிலே யார் சூரர்கள்? எவர் தேவர்கள்?" என்று தீர்மானிக்க முடியாவிட்டாலும்கூட இங்கேதான் நிஜமான சூரன்குத்து நடந்திருக்கிறது என்று அநேகர் பேசிக் கொண்டார்கள்.