பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கோளாறு

சாவித்திரிக்கு ஒரே பரபரப்பு. அவள் ஏற்பாடு செய்திருந்த விருந்து வெற்றிகரமாக அமைய வேண்டுமே என்றுதான். பிறர் மதிப்பையும் பாராட்டுதலையும் பெறத் தவிக்கிற எந்த அம்மாளுக்கும் இயல்பாக இருக்கக்கூடிய ஆசை தானே அது - -

சாவித்திரி சமூக அந்தஸ்தில் மிக உயர்ந்து விட்டவளும் அல்ல; தாழ்ந்து கிடப்பவளும் அல்ல. மத்தியதர வர்க்கத்துக் குடும்ப விளக்குகளுக்குச் சரியான பிரதிநிதி அவள் பிறந்த இடத்திலோ, புகுந்த இடத்திலோ செல்வம் குப்பை மாதிரிச் சிதறிக் கிடக்காவிட்டாலும் கூட, அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலே பிறந்து வளர்ந்து வாழும் பெருமை பெற்றவள்போல்தான் அவள் நினைப்பாள். நடப்பாள் செயல்புரிவாள் ஜம்பமாகப் பேசி மகிழ்வடைவாள்.

அவள் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, விருந்து ஏற்பாடு செய்துவிட்டாள். மேனாமினுக்கி இனத்தின் பிரதிநிதியாக விளங்கும் வசந்தா, வாய்வீச்சு வீசுவதில் வல்லவளான பத்மா, தனது திறமைக்கு அகில உலகமும் தலைவனங்கக் காத்திருக்கிறது என்று பெருமை கொள்ளும் கர்வி ஜானகி, "புதுப் பணக்காரி" மீனாட்சி அம்மாள்-விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்த இத்தனை பேரும் ஆடம்பர அலங்காரங்களோடு ஆஜராகி விட்டார்கள். -

அதையும் இதையும் பார்த்து, அவளையும் இவளையும் பற்றிப் பேசி, ஒவ்வொருத்தியும் மற்றவளின் நகை-உடை-சிங்காரிப்பு முதலியவைகளை ஆராய்ச்சி செய்து முடித்துவிட்டு, சாப்பிடுவதற்குத் தயாரானார்கள்.