பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருள் கவியவில்லை இன்னும்.

நாகரிகப் பெருநகரம் அசுரவேகத்தோடு, ஆரவாரமாய், இயங்கிக் கொண்டிருக்கும் வேளை மாலை நேரம்.

புற்றுக்களிலிருந்து கிளம்பி எங்கெங்கும் திரிகிற எறும்புகள் போல, அலுவலகங்களில் அடைபட்டுக் கிடந்துவிட்டு வெளியேறிய உழைப்பாளிகள்இயந்திரங்களை ஒட்டிப் பிழைக்கிறவர்களும், பேனா کلاته வாழும் குமாஸ்தாக்களும், பிறரும்-வீடுகளை நோக்கிச் செல்லும் வேளை, உளச் சோர்வும் உடல் சோர்வும் இருந்த போதிலும், வீடு எனும் ஜம்பப் பெயரை உடைய பொந்துகளிலும் வளைகளிலும் குகைகளிலும் ஒடுங்கிவிடும் ஆசையோடு சென்ற இந்த அப்பாவிப் பிராணிகளின், நடையிலே வேகம் துடித்தது. நடக்கத் தெம்போ ஆசையோ இல்லாதவர்கள் பஸ்களில் முட்டிமோதி ஏறி, இடித்து நெருக்கி அவஸ்தையுற்றும் பிரயாணம் செய்வதிலே சுகம் கண்டார்கள்.

வசதி உள்ளவர்கள் கார்களிலே பறந்து கொண்டிருந்தார்கள்.

எவ்வளவு விதமான கார்கள்

எத்தனை வர்ண பேதங்கள்

எத்தனை உருவ விசித்திரங்கள்

பெரிய நகரத்தின் ஜீவ நரம்புகளில் ஒன்றான முக்கிய ரஸ்தாவின் ஓரத்தில், பேவ்மெண்டின் விளிம்புபோல் அமைந்திருந்த சிறு சுவரின் கல் முகட்டின்மீது உட்கார்ந்திருந்த ஞானப்பிரகாசத்தின் கண்கள் கார்களை மட்டும் தானா எடைப்போட்டன.