பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணன்

திடீரென்று அவருக்கு ஒரு திகில் பிறந்தது. அர்த்தமற்ற, காரணமற்ற நடுக்கம் என்று அவர் உள்ளம் குறிப்பிட்டது.

அவருக்கு முன்னால், பூமியிலிருந்து முளைத்தெழுந்தவன் போல ஒருவன் நின்றான். அவனுடைய கண்கள் பூனையின் விழிகளைப் போல் அவரைக் கூர்ந்து நோக்கின. சிரிப்பதுபோல் அகன்று நீண்டிருந்த உதடுகளினூடே பளிச்சிட்ட பற்களின் வெண்மை தாமோதரனைப் பரிகசிப்பது போலிருந்தது. அவன் எங்கிருந்து வந்தான், அதுவரை எங்கே பதுங்கி நின்றான் என்பதைக் கவனிக்கத் தவறிவிட்ட அவர் ஏன் அவன் அப்படிச் சிரிக்கிறான் எனப் புரிந்துகொள்ள இயலாமல் திகைத்தார். -

“என்ன தாமோதரன் ஸார், உலாவப்போய்விட்டு வருகிறீர்களாக்கும்?" என்று கேட்டான் கேசவன். -

பெயர் சொல்லி அழைக்கும் பழக்கம் பெற்றிராத கேசவன் ஏன் திடீரென்று இவ்வாறு முன் வந்து விசித்திரமாக நடந்து கொள்ள வேண்டும்? குடிபோதையாக இருக்குமோ?-இந்த ரீதியில் தான் எண்ணமுடிந்தது அவரால்.

கேசவனின் திட்டம் வெற்றி கரமாகச் செயல்பட்டது. இவர் தான் நமக்கு வேண்டிய ஆள் என்று அறிவிக்க முயல்கிறவன் மாதிரி அவன் உரத்த குரலில் பெயரைக் குறிப்பிட்டதும், தயாராகப் பதுங்கியிருந்த போலீஸ் வீரர்கள் வேகமாக முன்வந்தனர் தாமோதரனைப் பிடித்துக் கொண்டனர். ஊருக்கு வெளியே சற்று தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை நோக்கி அவரை அழைத்துச் சென்றார்கள்.

"இப்படி ஒரு அபாயம் வரவிருக்கிறது என உணர்த்து வதற்காகத் தான் என் உள்ளம் குறுகுறுத்தது போலும் என்று அவர் எண்ணினார். எல்லாம் வழக்கமான நியதிப்படி இயங்கிக் கொண்டிருந்த போதிலும், மனிதர்களில் ஒருவன்-நண்பர்களில் ஒருவன்-ஏறும்ாறாக நடந்து கொள்ளத் துணிந்தானே" என்று முனங்கியது அவர் மனம்.

இதற்குள் விஷயம் எப்படியோ தெரிந்து தாமோதரனின் நண்பர்கள் ஓடி வந்தார்கள். வேறு பலரும் விரைந்து வந்தார்கள். கேசவனைக் கண்டதும். அவர்களுடைய ஆத்திரம் அதிகரித்தது.