பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளகிய மனசு

- சில கதைக்காரர்கள் "இலக்கியம் பண்ணுகிறேன்", "உணர்ச்சிகளைச் சித்திரிக்கிறேன்" என்று சொல்லி, எங்காவது கதையை ஆரம்பிப்பது - திடுதிப்பென்று முடித்து விடுவது - கதாபாத்திரங்களின் மனசைப் போட்டுத் "தாளித்து புரட்டி துவட்டி எடுப்பது போன்ற உததிகளைக் கையாளுகிறார்கள் அல்லவா? அவ்வித எழுத்துக்களை பெரிய இடத்து மீனாட்சி அம்மாள்படிக்க நேர்ந்தால், அவளுக்குச் சில தினங்கள் தூக்கமே பிடிக்காமல் போய்விடும். கதாபாத்திரங்களின் உளப்போராட்டங்களைப் படித்தால் அவளுக்கு ஒடுக்க முடியாதவாறு உள்ளக் குழப்பம் ஏற்பட்டுவிடும். .

கதைச் சுவைக்காக, "வீட்டை விட்டுக் கிளம்பிய அவன் இருளோடு இருளாகக் கலந்து மறைந்தான்" என்பதுபோல் எதையாவது எழுதிக் கதையை முடித்து விடுகிறார்களே சிலபேர். மீனாட்சி அம்மாள் எவ்வளவு கஷ்டப்படுவாள் என்பது அவர்களுக்குத் தெரியாது பாவம்' .

"வீட்டை விட்டு வெளியே போனவன் சாப்பாட்டுக்கு என்ன செய்தானோ? எங்கே படுத்துத் தூங்கினானோ? என்ன ஆகிறானோ?" என்று பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினைகளை அலைமோதச் செய்து தனது உள்ளத்தையே ஒரு கடலாக மாற்றிக்கொண்டு அவதியுறுவாள் அவள் என்றோ படித்த எதையாவது எண்ணிக்கொண்டு பாவம், அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு கஷ்டம் உடம்பு பூராவும் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக்கொள்ளணும் என்றால்? ஐயோ!' என்று மனம் துணுக்குறுவாள். அவள் கண்கள் தானாகவே கலங்கிவிடும்.

"உள்ளம் உருக்கும் கதை என்று விளம்பரப்படுத்தப்படுகிற சினிமாப் படங்களைப் பார்க்கப் போனால் மீனாட்சி அம்மாளின் கைக்குட்டை "சொட்டச் சொட்ட நனைந்து போகும். அதற்காகப் படங்களைப் பார்க்கச் செல்லாமல் இருந்து விடுவாளா அவள்? எந்தப் பெண் தான் அப்படி நின்று விடுகிறாள்?

இவற்றினால் எல்லாம் தான் பலரும் சொன்னார்கள் 'மீனாட்சி அம்மாளுக்கு ரொம்பவும் இளகிய மனசு" என்று.

"இளகிய மனசு படைத்த பெரிய வீட்டு அம்மாள் தர்மத்துக்குப் பயந்தவள். நியாயத்தை அனுஷ்டிக்க ஆசைப்படுபவள்.