பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"கிகுங்-ஜலதரங்கக் கிண்ணத்திலிருந்து தெறித்து விழுந்த ஒற்றை நாதம் போல வெடித்தது அந்த இனிய சிரிப்பு. வீதி வழியே மெது நடை நடந்து கொண்டிருந்த சிவப்பிரகாசத்திற்கு வேலை கொடுத்தது அது. அவன் தலையைத் திருப்பி, தெருவோரத்து வீட்டின் ஜன்னலைக் கவனிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தி விட்டது. திரும்பிப் பார்த்த சிவப்பிரகாசம், சாளரத்தில் சந்திர உதயம் கண்டு விட்டதாக மயங்கிப் போகவில்லை. சந்திரன் எவ்வளவு தான் தவம் கிடந்து மெலிந்து தேய்ந்தாலும், குறுகுறுக்கும் கரிய விழிகள் இரண்டும், குமிழ் மூக்கு ஒன்றும், சிரிப்பு விளையாடும் செங்குமுத வாயும் பெற முடியாது என்பது அவனுக்குத் தெரியும். எழில் ஊறும் இன்முகத்துக் குமரியைக் கண்டதும் சந்திரனோ என்று மயங்கி விடுவதற்கு அவன் கவிஞனல்லன்; காதலனும் இல்லை. சந்திரன் அருகே மேகம் வந்து விளையாடலாம். ஆனால் அந்த மேகத்தைப் பிடித்துப் பின்னிச் சடையாக எடுத்து அம்புலி விளையாடிக் களிக்கும் என்று அவன் காவியத்திலோ புராணத்திலோ படித்தது கிடையாது. மேலும், இவ்வாறு அநாவசியமாகக் கற்பனை செய்து பித்துற்றிப் புலம்புவதெல்லாம் அவனுக்குப் பிடிக்காது. ஆகவே, சிவப்பிரகாசம் திரும்பிப் பார்த்த போது, ஜன்னலின் பின்னால் தெரிந்த முகத்தை அழகான பெண்ணின் முகமாகத் தான் கண்டானே தவிர, பிறிதொன்றாக மதிக்கவில்லை. அந்த முகத்துக்குச் சொந்தக்காரி அழகியாகத் தான் இருக்க வேண்டும்