பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் மீண்டும் ஒரு முக்கியமான சம்பவம் நிகழ்வதற்கு வேண்டிய சூழ்நிலையைச் சிருஷ்டித்துக் கொடுத்தது அது. சிவப்பிரகாசத்தின் நண்பர் சுந்தரமூர்த்தி தனக்காக ஒரு உதவி செய்ய வேண்டும் என்று அவனைக் கேட்டுக் கொண்டார். எனக்கு நேரம் இல்லை; வேலை மிகுதியாக இருக்கிறது. இல்லாவிட்டால் நானே வந்து கவனித்துக் கொள்ளலாம்தான் என்று கடிதம் எழுதியிருந்தார் அவர். பிரமாதமான வேலை எதுவுமில்லை. ரத்னசாமியிடமிருந்து ஒரு புத்தகம் இரவல் பெற்று வரவேண்டும் என்பதுதான் நண்பர் கோரிய உதவி. இந்த அலுவல் அவனுக்குத் தொல்லையாகவா தோன்றும்? - சிவப்பிரகாசம் விரும்பிய புத்தகத்தின் பெயரைக் கேட்டதும் ரத்னசாமி கடகட வென்று சிரித்தார். அவர் அப்படி என்ன நகைச்சுவை நயம் கண்டுவிட்டார் என அறிவதற்காக ஓடிவந்தாள் சாந்தா. அவள் அவ்வாறு வந்த காட்சி அவனைப் பரவசப்படுத்தியது. பேஷ் பேஷ்! நல்ல கோலம்! அழகிய தோற்றம்! எனவியந்தது அவன் மனம். "மிஸ்டர் சிவப்பிரகாசம், உங்களுக்குச் சுந்தரகாண்டமா வேண்டும்? நீங்கள் சுந்தரகாண்டம் படிக்கப் போகிறீர்களா? ஏன், சீக்கிரம் கல்யாணம் ஆகவேண்டும் என்கிற ஆசை உங்களுக்கு வந்துவிட்டதா? என்று கேட்டார் அவர். சிவப்பிரகாசத்தின் விழிகள் சாந்தாவின் முகத்தை மொய்த்தன. அவ் விழிகளைத் தன் விழிகளில் ஏற்றாள் அவள். அவளுக்கு மகிழ்வு கலந்த நாணம் ஏற்பட்டது. ஆகா, இந்த முகம் இப்பொழுது எவ்வளவு அழகாக இருக்கிறது! ஜம்மென்று பூத்து விளங்கும் ரோஜாப் பூ மாதிரி அல்லவா திகழ்கிறது! என்று பாராட்டியது அவன் உள்ளம். அதன் பண்பின் தன்மை கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துபோய்க் கொண்டிருந்தது. அவன் அதை உணரவில்லை. அந்த விழிப்பு ஏற்பட்டிருந்தால்தான் சேச்சே, நான் இப்படி நினைப்பது தப்பு அல்லவோ! என்று தன்னைத் தானே அவன் கடிந்து கொண்டிருப்பானே!