பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

** 74 | கவிதை வாழ்வு குதுரகலம் கும்மாளியிடும் அவர் பேச்சிலே அவருடைய மனப் பண்பு மற்றவர்களுக்கு- அவரோடு நன்கு பழகியவர்களுக்குக் கூட புரியவில்லை என்றால் அவர் என்னதான் செய்ய முடியும்? 'கிருஷ்ண பிள்ளை வறண்ட பேர்வழி. அவர் வாழ்க்கையும் வறட்சியானதே என்று, அவரை அறிந்தவர்கள் சிலர் அபிப்பிராயப்படுவது உண்டு. கோலக் கோதை துணையோடு குளுகுளு வாழ்க்கை அவர் வாழவில்லை; எந்த ஒரு பெண்ணும் அவரைக் காதலித்த தாகத் தெரியவில்லை; அவரும் காதலின்பம், இல்லறம் என்றெல்லாம் பேசுவதில்லை என்பதனாலேயே அவர்கள் அவ்விதம் கருதினர். பிள்ளையின் புற வாழ்வைக் கொண்ட அவர்கள் அவ்விதம் மதிப்பிட்டனரே தவிர, அவர் அவருக்காகத் தனியானதொரு அகவாழ்வு வாழ்கிறார்அவரால் அப்படி வாழ முடியும்-என எண்ணினரல்லர். கிருஷ்ண பிள்ளைக்கு நாற்பது வயதுக்கும் அதிகமாகி விட்டது. அவர் கல்யாணம் செய்து கொள்ளவில்லை, கல்யாணம் செய்து கொண்டு எல்லோரையும் போல் வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற ஆசை தமக்கு இருப்பதாக அவர் காட்டிக் கொண்டதுமில்லை. சில உல்லாசிகளைப் போல் ஜாலி வாழ்வு வாழும் பண்பு பெறவுமில்லை. அவர். அவருக்குச் சிநேகிதர்கள் என்று இரண்டு மூன்று பேர்கள் இருந்தார்கள். சிநேகிதி என்று ஒருத்தி கூட அவர் வாழ்க்கைப் பாதையில் குறுக்கிட வில்லை. இதெல்லாம் அவரைத் தெரிந்தவர்களுக்குத் தெரியாதா என்ன? கிருஷ்ண பிள்ளையின் நண்பர் நாராயணனுக்கும் இது தெரியும். வறண்ட மனம் பெற்றவர் இவர் என்று நம்புகிறவர்களில் அவரும் ஒருவர். வறண்ட கோடை போன்ற பிள்ளை வாழ்வில் அவ்வப்போது குளுமை பரப்புகின்ற மென்காற்று தாமே தான் என்ற எண்ணம்