பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 99

எல்லாம் மனசைப் பொறுத்தது தான். தீக்குள் விரலை வைத்தால் உன்னை தீண்டும் இன்பம் தோன்றுவதையே நந்தலாலா"என்று சொல்லக்கூடிய மனப்பக்குவம் ரொம்ப உயர்ந்தது. அது சாமான்யர்களுக்கு சித்திக்க முடியாத ஒன்று.

நான் சாதாரணன் வலிகள்,வேதனைகள், துயரங்களை உணரக்கூடிய சாமான்யனே. ஆனாலும், இடது பாதத்தில் நான் பட்ட காயம் என்னை பெரிதாக பாதிக்கவில்லை என்பது உண்மை. அதை கோவை டாக்டர் கூட நம்ப மிகவும் சிரமப்பட்டார். நம்பவில்லை என்றே சொல்லலாம். வலியை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தி இருப்பதை காட்டுவதற்காக, நான் பொய் சொல்வதாக அவர் எண்ணினார் என்றே எனக்குப் பட்டது.

இது போன்ற சமாச்சாரத்தில் நான் ஏன் பொய் சொல்ல வேண்டும்? எல்லாம் மனநிலையைப் பொறுத்தது தான்.

செப்டம்பர் 6-ம் தேதி ஒரு அற்புத நாள். அன்று ஆறு மாவட்டங்கள் வழியாக (கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, தென் ஆற்காடு, வடஆற்காடு பயண வாகனம் (பஸ்) மாற்றங்கள். எனது அருமை திருநெல்வேலி மாவட்டத்தை விடப் பசுமையான, குளுமையான, சூழ்வெளிகள். அங்கங்கே பெரிசு பெரிசாய்-வர்ண மயமாய்-ஐயனார் சிலைகள். ஒரு இடத்தில் பூதவடிவ, தொந்தி வாலாக்களே கூட்டம் போட்டிருப்பது போல், பல ஐயனார் சிலைகள்-சதுர அமைப்பில்-உட்கார்ந்திருந்தன. வேடிக்கையாக இருந்தது.

தர்மபுரி மாவட்டம்-சேர்வராயன் மலைப் பகுதியினூடே பயணம் மனோகரமாக இருந்தது. மலைப்பாதை அங்கங்கே ஒரு சில குடிசைகள் கொண்ட குடியிருப்புகள். ஒன்றிரண்டு தங்குமிடங்கள் மட்டுமே சில "ஊர்" இல், இப்படிப்பட்ட இடம் ஒன்றில் சிறிது காலம் வசிக்கக்கூடிய வாய்ப்பும் வசதியும் எனக்குக் கிட்டுமானால், எவ்வளவு புதுமையாக, இனிமையாக, பயங்கரமாகக் கூட, அற்புதமாக, தனிக் காவியமாக அமையும் என் வாழ்க்கை இப்படி ஆசைப்பட்டது என் மனம்,

அன்றையத் தொடர்ச்சி தான் இரவு 12:30மணிக்கு வாலாஜாவில் ஒரு லாரியில் ஏற முயன்று வழுக்கி விழுந்து, இடது கால் பாதத்தில் சக்கரம் அமுக்கி, பாதத்தில் காயம் பட்ட விபத்து! என் மனம் அதனால் பாதிக்கப்படவில்லை.

அவ்வளவு தான்!

அன்பு