பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் # 33

சண்முகவடிவு

உடுமலைப்பேட்டை #4-7-79

அன்பு மிக்க சண்முகவடிவு,

நலம். நீயும், அம்மா அப்பா, சங்கரா, ராதா, ரேவதி, சுப்ரமணியன், கணேசன் எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

அன்று அன்றையப் பாடங்களை அன்றன்றே நன்றாக, கவனமாகப் படித்து வந்தால்,பரீட்சை சமயத்தில் சிரமப்பட வேண்டியிராது. எல்லோரும் ஒழுங்காகப் படித்து வருவீர்கள் என்று நினைக்கிறேன்.

இங்கே எல்லோரும் சுகம்.

உடுமலைப்பேட்டை அருமையான ஊர். தண்ணிர் வசதி தாராளமாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். மண் வளமானது. தென்னைகளும் இதர மரங்களும் வீட்டுக்கு வீடு செழிப்பாக வளர்ந்து நின்று இனிய காட்சிகளாக விளங்குகின்றன.

சமீப காலத்தில் கட்டப்பட்ட வீடுகள் புதிய மாடல்களில், வசீகரமாகவும் வசதியாகவும் அமைந்துள்ளன. ஒரு லட்சம், ஒன்றரை லட்சம் என்று பணம் செலவு பண்ணி வீடுகள் கட்டியிருக்கிறார்கள். ஏகப்பட்ட நிலத்தை வளைத்து, பெரிதாக ஸ்டைலாக கட்டப்பட்டுள்ள சில வீடுகள் இருக்கின்றன. அவை பல லட்சங்களை ரூபாயைத் தான்) சாப்பிட்டிருக்கும். அப்படிக் கட்டுவதற்கு நிலமும் கிடக்கிறது; பணவளமும் இருக்கிறது. இங்கே. அப்படிக் கட்டியிருப்பவர்களில் - கட்டிக் கொண்டிருப்பவர்களில் - வியாபாரிகள் முக்கியமானவர்கள்.

இங்கு தெருக்கனில் எந்நேரமும் பெண்கள் காணப்படுவதில்லை. சினிமா காட்சிகள் ஆரம்பமாகக் கூடிய மாலை வேளையில் எல்லா வீதிகளிலும் பெண்கள் சிங்காரித்துக் கொண்டு போவதை காணமுடியும். பெண்கள் - பலதரமான கடைகளிலும் உட்கார்ந்து வியாபாரம் பண்ணுகிறார்கள். இந்த ஊரில் இது ஒரு விசேஷமாகப் படுகிறது.

பலப்பல வீடுகளைச் சுற்றிலும் தோட்டத்தில் பூச்செடிகள் நிறைய. செம்பருத்திப் பூக்கள் மிகுதி. ரோஜாச் செடிகள் அதிகம். பெரிதாக, அழகாக, நிறையப் பூத்துச் சிரிக்கின்றன. ரோஸ் (PINK) நிறம், சிவப்பு, வெளிறிய சிவப்பு-இப்படிப் பல வகைகளில். அவற்றைப் பறித்து வீணடிக்காமல், செடிகளிலேயே சிரிக்க விட்டிருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.