பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3 வல்லிக்கண்ணா:

சுப்பிரமணியன்,

ராஜவல்லிபுரம் தி-தி-85

அன்புள்ள சுப்பிரமணியன், உனது 1-5-86 கடிதம் சந்தோஷம் தந்தது. பள்ளிக்கூடம் திறந்து, உனக்கும் கணேசனுக்கும் புதுப் புத்தகங்கள் வாங்கிவிட்டதை அறிந்து மகிழ்கிறேன்.

புதுப் புத்தகங்களுக்கு தனியாக ஒரு வாசனை உண்டு: ஒரு அழகு உண்டு; ஒரு கவர்ச்சி உண்டு. புதுப்புத்தகங்களைக் கையில் வைத்துக் கொண்டிருப்பதே ஒரு சந்தோஷம் தரும். திருப்பித் திருப்பிப் பார்க்க ஆசை ஏற்படும். - பள்ளியில் பாடங்கள் ஆரம்பித்து, எழுத்து வேலைகளும் தரத் தொடங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

நீயும் ரேவதியும் கடிதம் எழுதியுள்ளதாக கல்யாணி அண்ணன் எழுதியிருக்கிறான்.

நீங்கள் பழனியப்ப மாமாவின் உற்சாகமான, ஊக்கமான, துணையோடு பல இடங்களையும் சில படங்களையும் கண்டு களிக்க முடிந்தது சந்தோஷத்துக்கு உரியது தான்.

தாராளமாகச் செலவு பண்ண நிறையப் பனம் இருக்கவேண்டும். அல்லது, நிறைய நிறையப் பணம் வந்து கொண்டே இருக்கவேண்டும். அப்ப தான் ஜாலியாக அநேக இடங்களுக்கும் போகலாம்; நினைத்ததைச் செய்யலாம்; ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கலாம்.

பணம் நிறைய இல்லாவிட்டாலும், இருக்கிறதை வைத்துக் கொண்டு, சந்தோஷங்களை அனுபவிக்க, மனம் வேண்டும்.

சிலருக்குப் பணம் நிறைய இருக்கும். அனுபவிக்க மனம் இராது. தாங்களும் செலவு செய்து சந்தோஷம் அடையமாட்டார்கள்; மற்றவர்களுக்குச் செலவு செய்யவும் மாட்டார்கள்.

பழனியப்ப மாமாவுக்கு, தாராளமாகச் செலவு செய்து, தானும் மற்றவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற மனம் இருக்கிறது. இது உயர்ந்தது.

ஆபூ பென் ஆடம் (ABU BEN ADAM) என்றொரு கவிதை. அருமையான மனிதன் ஒருவனைப் பற்றிச் சொல்கிறது.