பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தகங்களை படித்து விட்டு என் அபிப்பிராயத்தை அவர்களுக்கு எழுதினேன். பத்திரிகைகளைப் பாராட்டியும் வாழ்த்தியும் எழுதினேன். அவை தங்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக அவற்றைப் பெற்றவர்கள் சொன்னார்கள்.

புத்தகம் பத்திரிகை அனுப்பினால், வரப்பெற்றேன் என்று கடிதம் எழுதித் தெரிவிக்கக் கூட மனமில்லாத எழுத்தாளர்கள் பெருத்த இந்த நாட்டிலே, கிடைத்ததும் படித்து விட்டு கடிதம் எழுதுகிற எனது பண்புக்காக மகிழ்ச்சி அடைந்தவர்கள், கடித வாசகங்களை தங்கள் பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் அச்சடித்து

இவன் எல்லோரையும், எல்லாவற்றையும், எப்பவும் பாராட்டிக் கொண்டிருக்கிறான் என்று எழுத்துலகத்தை சேர்ந்தவர்கள் பசிச சிக்கலானார்கள்; குறை கூறினார்கள். ஆனாலும், என் கடிதங்களை எதிர்பார்த்து எனக்கு வரும் பத்திரிகைகள் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன.

என் கடிதங்கள் தொகுக்கப்பட வேண்டும், புத்தகமாகப் பிரசுரிக்கப்பட வேண்டும் என்று என் நண்பர்கள் சிலர் அவ்வப்போது விருப்பம் தெரிவித்தார்கள். அது எளிதான காரியமல்ல என்று தான் சொல்லிவந்தேன்.

என்னிடம் மிகுந்த மதிப்பும் பிரியமும் கொண்டிருந்த அன்புச் சகோதரர் மு. நாகரத்தினம் எப்படியும் என் கடிதங்களை சேகரித்து ஒரு தொகுப்பாக வெளியிட்டே தீருவேன் என்று உறுதி பூண்டார். முயன்றார். காலவேகம் அவர் வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்புகள், உள்ளத்தில் உண்டாக்கிய காயங்கள் காரணமாக எதிலுமே உற்சாகம் இல்லாதவராக அவர் மாறிப் போக நேர்ந்தது. இருப்பினும் அவர் அந்தப் பொறுப்பை என் இனிய நண்பர், வேர்கள் மு. இராம விங்கத்திடம் ஒப்படைத்து விட்டு, தான் ஒதுங்கிக் கொண்டார்.

இலக்கிய வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடும், என்னிடம் அதிகமான பிரியமும் நட்புணர்வும் கொண்ட இராமலிங்கம் பெரிதும் முயன்றும், சிறிதளவு கடிதங்களைத் தான் சேகரிக்க முடிந்திருக்கிறது. அவற்றில் புத்தக மதிப்புரைகள், பத்திரிகைப் பாராட்டுகள், இலக்கியப் பிரச்சினைகளுக்கு தெளிவு காண விரும்பிய அன்பர்களுக்கு எழுதப்பட்ட (கட்டுரைத்தன்மை பெற்றுவிட்ட) கடிதங்கள், சொந்த விவகாரங்கள் பற்றிய பெர்சனல் கடிதங்கள், முதலியவற்றை தொகுப்பில் சேர்க்காது ஒதுக்கிவிட்டோம். அத்தகையவை கணிசமான அளவு வந்துள்ளன. அன்புடன் அவற்றை அனுப்பிவைத்த நண்பர்கள் அனைவருக்கும் என் இதயபூர்வ நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.