பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

வல்லிக்கண்ணன் சென்னை. 6–72-95

அன்பு மிக்க கவித்துவன்,

வணக்கம்.

நலம்தானே?

இன்று புக்போஸ்டில் சோலைக்குயில் 3 மாத இதழ்கள் அனுப்பியிருக்கிறேன். நல்ல கவிதை இதழ். ஒருவேளை இது உங்களுக்கு வந்தாலும் வந்தகொண்டிருக்கலாம். பாட்டாளிக்கு வந்தது. பலமாதங்களுக்கு முன்பு தொடர்ந்து வருகிறதோ என்னவோ, மரபுக் கவிதைகளுக்கான இதழ். நல்ல கவிதைகள் வருகின்றன. நீங்கள் தொடர்ந்து கவிதை எழுதிக் கொண்டிருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

வாழ்க்கை மனவறட்சி, நம்பிக்கை வறட்சி ஏற்படுத்தக் கூடியது. எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் என்று சொல்லமுடியாது. நான் எதையும் எதிர்பார்ப்பதில்லை. எனவே என் வாழ்க்கையில் ஏமாற்றங்கள் இல்லை. எதிர்ப்படுவன சந்தோஷங்களே. என்னைப் பொறுத்தமட்டில், போன வருடத்தை விட இந்த வருடம் ரொம்ப நல்ல வருடம். இப்படியே ஒவ்வொரு வருடமும் இருந்து வந்திருக்கிறது. உழைப்பதே ஒரு சந்தோஷம்தான்.

நாம் தேர்ந்து கொண்ட துறையில் ஊக்கத் தோடு உழைப்பதனால் கிடைக்கக் கூடிய சந்தோஷத்துக்கு ஈடுஇணை கிடையாது.

அன்பு வ. க.


சென்னை. 21-12-95

அன்பு மிக்க கவித்துவன்,

வணக்கம்.

உங்கள் 13ம் தேதிக் கடிதம் மிகுந்த மகிழ்ச்சி தந்தது. நெசவு இதழில் வந்த உங்கள் காணிக்கை என் மனசை தொட்டது. உங்கள் உள்ளத்து உணர்வுகளை அழகாகப் பதிவு பண்ணியிருக்கிறீர்கள்.