பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 9?

உணர்வோடு இருக்கிற அளவுக்கு உடல் ஒத்துழைப்பதில்லை. வண்டி ரொம்ப நாள் ஓடாது போலிருக்கு என்று எழுதிவைத்தேன்.

என் உள்ளத்து வேதனை பற்றி முன் கடிதத்தில் எழுதினேன். வேதனை புதிதாக முளைத்ததில்லை. என்றும் உள்ளேயே மொக்கு விட்டுக் கொண்டிருப்பது தான். அமர வேதனை அது.

கோடை காலத்தில், கொதிக்கும் வெயிலில், கால்களில் செருப்பு இல்லாது நடக்கிறவர்களைப் பார்த்து என் வேதனை பெருகுகிறது. குளிர் காலத்தில், இரவுகளில், பனியிலும் குளிரிலும், ரோடோரத்தில் படுத்து முடங்கிக் கிடக்கும் ஆண்கள்-பெண்கள்-குழந்தைகளைப் பார்த்து நாள்தோறும் வேதனையால் கனத்தது உள்ளம்.

திருமணம் ஆகாது வாடுகிற பெண்களுக்காகவும், திருமணம் ஆகியும் புகுந்த வீட்டின் கொடுமைகளுக்கு உள்ளாகி வதைபடுகிற பெண்களுக்காகவும், இல்லறத்தில் குணக்கேடர்களான கணவர்களால் துயரங்களுக்குள்ளாகி சோகத்துடன் வாழும் பெண்களுக்காகவும் உள்ளம் வேதனைப்படுகிறது.

அப்படி எல்லாம் இருந்தாலும், உலகத்து இன்பங்களைக் கண்டு மகிழத் தவறுவதில்லை மனசு, சின்னச் சின்ன இனிமைகளை ரசித்து சந்தோஷப்படாமல் இல்லை. காலம் தோறும் இனிமைகளுக்குக் குறைவு இல்லை.

பிப்ரவரியில் நான் பயணம் செய்த ஊர்களில் எங்கும், போகும் வழிகளில் எல்லாம், முருங்கை மரங்களில் அடர்த்தி அடர்த்தியாய் பூங்கொத்துகள் சிரித்துக் குலுங்கின. ரொம்ப மனோகரமாக இருந்தது அக் காட்சி.

வேலிக்காத்தான் செடிகள், பழங்கால கிராமபோன் பெட்டியின் குழல் போன்ற அமைப்பை உடைய பூக்களை காலைவேளையில் அழகாக காட்சிப் படுத்தின.

பங்குனி மாதமே வேப்பமரங்கள் பச்சைப் பசுமையாய் புதுக்கோலம் பூண்டுவிட்டன. சித்திரையில், ஒவ்வொரு வேப்பமரமும் தனித்தனிக் குளுகுளு வழிநெடுக வேப்பமரங்கள் மோகனத் தோற்றம் காட்டி மகிழ்வித்தன.

பொகெய்ன்வில்லா பூக்கள் கலர்கலராய் கொத்து கொத்தாய். மஞ்சள் நிற புஷ்பங்கள் விதம்விதமாய். அரச மரங்களின் புதிய மினுமினுப்பு. பச்சை நிறத்தில் தான் எத்தனை வர்ண பேதங்கள்!

பூக்களில்தான் எத்தனை எத்தனை வடிவங்கள். வனப்புகள்!