பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132, வல்லிக்கண்ணன்

நன்றி ஸார் என் பேச்சைக் கேட்டதற்காக மகிழ்ச்சி என்று சொல்லி அவன் சலாமிட்டான். அவன் ஒரு பைத்தியம் என்று நான் முடிவு கட்டவில்லை. இப்படியும் ஒரு கேரக்டர் என்று தான் நினைத்தேன். நானும் சலாம் போட்டுவிட்டு நடந்தேன்.

உழைக்கும் ஆற்றல் இருந்தும் உழைக்க மனம் இல்லாமல் சுலபத்தில் பணம் பண்ணிவிடவேண்டும். எளிதில் பெரும் பணக்காரனாகி வாழ்க்கைச் சுகங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசை மனித சமுதாயத்தில் அதிகமாகப் பரவி வருகிறது. இந்த நபர் அதற்கு ஒரு உதாரணம். இவன் அபூர்வப் பிரகிருதி அல்ல. சர்வசாதாரணமாகிவருகிற ஒரு சமுதாயப் பிராணிதான். இப்படி என் மனம் பேசிக்கொண்டிருந்தது.

ஜனநெருக்கடியும் வாகனப் போக்குவரத்தும் மிகுதியாக உள்ள தெருக்களின் வழியே நான் நடந்துகொண்டிருந்தேன். வழக்கம்போல் என் மனம் எங்கோ சஞ்சரித்த வண்ணமிருந்தது. அதனால் ஹல்லோ ஸார் என்ன கவனிக்காமலே போlங்களே? என்று கேட்டபடி எதிரே வந்து நின்ற நபர் என்னைத் திடுக்கிட வைத்தார் என்றே சொல்லவேண்டும். அவர் எனக்கு நன்கு அறிமுகமான மிஸ்டர் ராவ்ஜி என உணர்ந்ததும் நான் இஹி ஹி என்று சிரிப்பு உதிர்த்து என்ன செளக்கியம்தானே? எனக்கேட்டு வைத்தேன்.

செளக்கியம் என்று சொல்லலாம்தான். ஆனால் இதிலே என்ன செளகரியம் இருக்கு? நாம் வாழ்வது ஒரு வாழ்க்கையா? என்னவோ சம்பாதிக்கிறோம். யாருக்காக? வீடுகட்டி வாடகைக்கு விடுகிறவனுக்காக பால்காரனுக்கும் கடைக்காரன்களுக்கும் டாக்டருக்கும் பாக்கிப் பணத்தைக் கொட்டிக் கொடுக்கிறோம். நம் இஷ்டம்போல் செலவு செய்வதற்கு நம்ம சம்பாத்தியத்திலே ஏதாவது மிச்சமிருக்குதா என்ன? பேரு பட்டனத்திலே ஒரு கம்பெனியிலே வேலை. மாசச் சம்பளம் நானூறு ரூபாய். இது பாதி மாசத்துக்குள்ளேயே கரைஞ்சு போகுது அப்புறம் கைமாத்துக்கும் கடனுக்கும் அலைய வேண்டியிருக்கு. இதிலே ஏது செளகரியமும் செளக்கியமும் என்று நாடக மேடைப் பாணியில் பேசித் தீர்த்தார் நண்பர். -

இவர் ஒரு சுவாரஸ்யமான பேர்வழி. மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த, மாசச்சம்பளம் பெறும் உத்தியோக இனத்தில் இடம் பெற்று, இன்னும் முன்னேறி உயர வேண்டும் என்ற ஆசைகளை வளர்த்து, ஆனால் உயரமுடியாமலும் இருக்கிற நிலைமையில் திருப்திகொள்ள இயலாமலும் திண்டாடுகிற எத்தனையோ பேர்களில் மிஸ்டர் ராவ்ஜியும் ஒருவர். தொழிலால் குமாஸ்தா.