பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் #9

திருத்துவதாகக் கதை சொல்லும், பெண்கள் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டதையும், அந்நியத் துணிக்கடை முன்நின்று கதர்ப்பிரசாரம் செய்ததையும் வை.மு.கோ. நாவல்களில் கையாண்டுள்ளார். ஸார மதி, தியாகக்கொடி போன்ற அவரது நாவல்கள் அந்நாட்களில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.

கள்குடியினால் ஏற்படும் தீமைகளை விளக்கிப் பல நாவல்கள் எழுதப்பட்டன. ஒரு விவசாயியின் தீவிரமான மண் ஆசையை விவரிக்கும் சங்கர்ராமின் மண்ணாசைகூட கிராமத்தில் கள்ளுக் கடையால் ஏற்படும் தீமையையும், குடிவெறியினால் விவசாயிகள் கெட்டுத்தீயவர்களாகிக் கொடுஞ்செயல்கள் புரிவதையும் எடுத்துச் சொல்கிறது. மக்கள் தம் வாழ்வில் காந்தியக் கொள்கையைக் கையாள வேண்டிய அவசியத்தை இந்நாவல் வலியுறுத்துகிறது.

யோகி 'சுத்தானந்த பாரதியார் எழுதிய அன்பு நிலையம் அல்லது வாழும்வகை என்ற நாவலும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது ஆகும். கலப்புத் திருமணம், தேசிய நோக்கு உண்மை மீது பற்றுதல், அன்புவழி நடத்தல் முதலியவற்றை வலியுறுத்தி, அரசியல் வளர்ச்சி ஆன்மீக வளர்ச்சியாதல் வேண்டும் எனும் காந்தியக் கொள்கையை எடுத்துச் சொல்லும் தன்மையில் இந்த நாவல் அமைந்துள்ளது.

எஸ். சீதாராமையா, காந்திஜியின் அன்பு அகிம்சை, ஆசிரம வாழ்க்கைமுறை ஆகியவற்றைச் சிறப்பிக்கும் விதத்தில் காட்டுர் ராமு என்ற நாவலை எழுதியுள்ளார். கதாநாயகன் ராமு காந்திய வழியில் ஒரு புதிய சமூகத்தை அமைப்பதை இலட்சியமாகக் கொண்டு செயல்புரிவதாக நாவல் பின்னப்பட்டிருக்கிறது.

அகிம்சைக்கொள்கைக்கும் பலாத்காரக் கொள்கைக்கும் உள்ள மாறுபாட்டை அடிப்படையாகக் கொண்டும், முதல் சத்தியாக் கிரக இயக்கத்தைப் பின்னணியாக வைத்தும் எழுதப்பட்ட நாவல் 'பலாத்காரம்’ என்று சாண்டில்யன் குறிப்பிட்டுள்ளார். 1934ல் சாண்டில்யனால் எழுதப்பட்ட இந்த நாவல் பிற்காலத்தில் புரட்சிப்பெண் என்ற பெயருடன் மறுபிரசுரம் பெற்றது.

காந்தி, காந்தியம் என்று குறிப்பிடாமலேயே, காந்தியத் தாக்கத்தோடு அநேக நாவல்கள் எழுதப்பட்டன. 1940களில் கடமை உணர்வு, பொதுநலத்தொண்டு, உண்மை மீது பற்றுதல், விதவை மறுமணம், கிராம சீர்திருத்தம் முதலிய விஷயங்களை இந்நாவல்கள் பேசின. - - - -

இந்தியா விடுதலை பெற்று, மகாத்மாகாந்தி சுட்டுக் கொல்லப் பட்ட பிறகு, காந்தியத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட இலக்கியமுயற்சிகள் குறைந்து போயின என்றே சொல்ல வேண்டும். 1930களிலும் 40களிலும் காந்தியக் கொள்கைகளை வலியுறுத்தும்