பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் 44 அவர் கதை எழுதிய காலத்தில் இந்தப்போக்கு வெகு துணிச்சலானது. புரட்சிகரமானதும்கூட. இக்கதைகள் மிகுந்த எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெறுப்பையும் பெற்றன. எனவே தான் மனிதனின் சிறுமைகளையும் தப்பிதங்களையும், வக்கிர விசித்திரங்களையும் கதைகளில் சித்திரிப்பது குற்றமோ பாடமோ ஆகாது என்று புதுமைப்பித்தன் வாதாட வேண்டியாதாயிற்று.

அந்நாட்களில் இதர எழுத்தாளர்கள் தொடத் தயங்கிய விஷயங்கள் பலவற்றையும் புதுமைப்பித்தன் தனது கதைகளுக்குப் பொருளாக்கினார். தனது நோக்கில் அனுதாபத்தோடு அல்லது கேலியும் நையாண்டியுமாக, அல்லது நம்பிக்கை வறட்சியோடு அவற்றைச் சித்திரித்தார்.

விதவைகளுக்கு மறுமணம், கலப்புத் திருமணம் ஆகியவை சமூக சீர்திருத்த நோக்குடன் தீவிரமாகப் பிரசாரம் செய்யப்பட்டு வந்த காலம் அது. அந்தச் சமயத்தில், கலப்புத் திருமணத்தைப் பரிகசிப்பதுபோல் அவர் கோபாலய்யங்காரின் மனைவி என்ற கதையை எழுதினார். கண்டதும் காதல். கலப்புமணம் என்ப தெல்லாம் கல்வித்தரமும் உணவுப் பழக்கவழக்கங்களும், வாழ்க்கைப் பண்புகளும் மிகவும் முரண்பட்டனவாக இருக்கிற ஜோடிகளி டையே எப்படிப் பொருந்தா மணம் ஆகிப்போகிறது என்பதை அவர் கிண்டலாக விவரிக்கிறார் இந்தக் கதையில்.

புதுமைப்பித்தன் கலப்புத்திருமணத்தின் எதிரி அல்ல. வாழ்க்கையில் இப்படிப்பட்ட முரண்பாடுகளும் உண்டு என்று சுட்டிக்காட்டிக் கேலி பண்ணுவதில் அவருக்கு விருப்பம் அதிகம் இருந்தது என்பதையே இக்கதை சுட்டுகிறது.

மதமாற்றம், அதனால் பாதிக்கப்பட்ட இந்துக் குடும்பத்தின் நிலைமை, அதைச் சேர்ந்த தனிநபர்களின் போக்குகள் இவற்றை விவரிக்கும் புதிய கூண்டு புதுமைப்பித்தனின் சிறந்த கதைகளில் ஒன்று. அந்தக்கதையிலும் கலப்புமணம் நிகழ்கிறது. அதில் வருகிற பெண் உயர்ந்தவள், படித்தவள், பண்புமிக்கவள். நெருக்கடியான நேரங்களில் அவள் எவ்வாறு நடந்து கொள்கிறாள் என்பதை இயல்பாகப் படம்பிடித்துள்ளது புதிய கூண்டு.

மதத்தின் தெய்வத்தின் தத்துவங்களின் பெருமைகளைப் பேசிப்பொழுது போக்குகிற பெரிய மனிதர்களின் வேஷங் களையும் செயல்முர்ண்பாடுகளையும் புதுமைப்பித்தன் தனது கதைகளின் மூலம் எடுத்துக்காட்டத் தயங்கவில்லை. கொடுக்காப் புளிமரம், நியாயம், வாழ்க்கை போன்றவை இந்த ரகமானவை.

வறுமைநிலை மனிதனைப் பாடாய்ப்படுத்துகிறது. இல்லாமை யினால் பாதிக்கப்பட்ட பலரக மனிதர்களும் அவர்களுடைய மனநிலைகளும், வாழ்க்கைமுறைகளும் புதுமைப்பித்தனால் யதார்த்தமாகவும் உருக்கமாகவும் சித்திரிக்கப் பட்டுள்ளன.