பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் 55 வேகம் பரவிய காலகட்டத்தில் இலங்கையில் அந்த அலைவீச்சு தீவிரமாகச் செயல்பட்டது. இளங்கீரனின் மரகதம் தோன்றியது. பின்னர் டொமினிக் ஜீவாவின் மல்லிகை தோன்றி வளரலாயிற்று. தமிழ்நாட்டில், இந்திய விடுதலைக்கு முன்புவரை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி - மறுமலர்ச்சி இலக்கியம், மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் என்றெல்லாம் வழங்கப்பட்டு வந்த பிரயோகங்கள் அரசியல் அலைகளின் எழுச்சி காரணமாக ஒரத்தில் ஒதுக்கப் பெற்றன என்றே சொல்லவேண்டும்.

நாட்டில் செல்வாக்குப் பெற்று வந்த திராவிடர் இயக்கம், அதன் பரிணாமமான திராவிட முன்னேற்றக்கழகம் சார்ந்த தலைவர்கள் தமிழ் மறுமலர்ச்சி, தமிழர் மறுமலர்ச்சி என்பதற்குத் தனிஅர்த்தமும் வர்ணமும் கொடுத்துப் பிரசாரம் செய்து வந்தனர். அந்த நோக்கில் இலக்கியப் பத்திரிகைகள் என்று அநேகப் பத்திரிகைகள் 1940களின் பிற்பகுதியிலும், 1950களிலும் பிரசுர மாயின. இவற்றிடையே பொன்னி பத்திரிகை குறிப்பிடத் தகுந்ததாக வந்து கொண்டிருந்தது.

திராவிடர் இயக்கக் கொள்கைகளை வலியுறுத்தும் கதை களையும் கட்டுரைகளையும் வெளியிட்ட பொன்னி பாரதிதாசன் பரம்பரை என்று இளைய கவிஞர்கள் பலரது படைப்புகளை அறிமுகம் செய்தது. எழுத்தாளர் விந்தன் எழுதிய நாவல் ஒன்றையும், டி.கே. சீனிவாசன் எழுதிய ஆடும் மாடும் நாவலையும் தொடர் கதைகளாகப் பிரசுரித்தது.

பொன்னி வெளிவந்து கொண்டிருந்த சமயம், நண்பன் என்ற இலக்கிய மாசிகை தோன்றியது. சோமு என்று தமிழ் உலகுக்கு நன்கு அறிமுகமான மீ.ப. சோமசுந்தரம் அதன் ஆசிரிய ராக இருந்தார். தரமான விஷயங்களை அது தந்தது.

சில பத்திரிகைகள், இலக்கிய இதழ்கள் என்ற பெயரில், நீண்ட காலம் வாழ்ந்தது உண்டு. ஆயினும் அவை இலக்கியப் பிரக்ஞையோடு செயல்பட்டன என்று கூறமுடியாது. வதவத என்று நிறையப் பக்கங்கள், அதிகம் அதிகமான கதைகள், தொடர் கதைகள் எல்லாம் அவற்றில் இருக்கும் என்றாலும், அவை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிறுகதைகள் அல்லது நாவல்கள், பெயர்சொல்லக் கூடிய எழுத்தாளர்கள், கவிஞர்களை அறிமுகப் படுத்தவேயில்லை. கும்பகோணத்திலிருந்து வந்த காவேரியும், கோயம்புத்தூரில் பிரசுரமான வசந்தம் மாசிகையும் இந்த இனத்தில் சேரும்.

இந்திய சுதந்திரத்துக்குப்பிறகு நாட்டில் அரசியல் விழிப்புடன் வேக இயக்கம் பெற்று வளரத் தொடங்கியது முற்போக்கு இலக்கிய நோக்கு இது மார்க்சீயத் தத்துவப் பார்வையை, சமுதாய நோக்கை, வலியுறுத்துவது.