பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ வல்லிக்கண்ணன்

ரகுநாதன் ஆரம்பத்தில் மறுமலர்ச்சி இலக்கியவாதியாகத் தான் எழுத்து முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்.

1940களின் முற்பகுதியில் முல்லை முத்தையா நடத்திய முல்லை என்ற இலக்கிய மாசிகையில் ரகுநாதன் ஆசிரியராகப் பணியாற்றினார். துணிச்சலான கதைகள், விமர்சனங்கள், ஒவியங்கள் முல்லையில் பிரசுரமாயின. புதுமைப்பித்தன் எழுதிய விபரீத ஆசை, காரீயூர், லா.ச. ராமாமிர்தம் கதைகள், கு. அழகிரிசாமியின் இலக்கியக் கட்டுரைகள் முக்கியமானவையாகும்.

பின்னர் ரகுநாதன் கம்யூனிச தத்துவத்தினால் ஈர்க்கப்பட்டு, முற்போக்கு இலக்கியவாதியாக வளர்ச்சிபெற்றார். அவருடைய ஈடுபாடுகளை சாந்தி என்ற இலக்கியப் பத்திரிகை பிரதிபலித்தது. பிறகு சரஸ்வதி நன்கு எடுத்துக்காட்டியது.

விஜயபாஸ்கரன் ஒரு கம்யூனிஸ்டாக இருந்த வேளையிலேயே இலக்கியத்தரமாக ஒரு பத்திரிகையை நடத்தவேண்டும் என்ற ஆசையோடு சரஸ்வதியை நடத்தினார். முற்போக்கு இலக்கிய வாதிகளும், மறுமலர்ச்சி இலக்கியவாதிகளும் சரஸ்வதியில் எழுதி ாைர்கள். இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகளும் சரஸ்வதியில் அதிகமாக இடம்பெற்றன. எழுத்தாளர் ஜெயகாந்தனின் வளர்ச்சிக்கு சரஸ்வதி பெரிதும் உதவியது.

சரஸ்வதி நடந்துகொண்டிருந்த காலத்திலேயே கம்யூனிஸ்டுக் கட்சி சார்பில் முற்போக்கு இலக்கியப் பத்திரிகையாக, தாமரையை ப. ஜீவானந்தம் தோற்றுவித்தார். வெள்ளிவிழா வருடத்தில் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும் தாமரை சமுதாயப் பார்வையோடு படைக்கப்படுகிற சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளைப் பிரசுரித்து வருகிறது. இந்த நோக்கில் எழுதுகிற எழுத்தாளர்கள் பலரை ஊக்குவித்துள்ளது. இலக்கிய ஆர்வம் அளித்திருக்கிறது.

சரஸ்வதி வந்து கொண்டிருந்த காலத்திலேயே மணிக்கொடி எழுத்தாளர் சி.சு. செல்லப்பா எழுத்து மாதப்பத்திரிகையை ஆரம்பித்து, இலக்கிய விமர்சன ஏடு ஆக நடத்தினார். எழுத்து புதுக்கவிதைக்கு இயக்கவேகம் தந்த பத்திரிகையாகவும் விளங்கிற்று. எழுத்து 12 வருடங்கள் நடைபெற்றது.

அதே சந்தர்ப்பத்தில் க.நா. சுப்ரமண்யம் இலக்கிய வட்டம் என்ற பத்திரிகையைத் தீவிர இலக்கிய ஏடு ஆகக்கொண்டு வந்தார். உலக இலக்கிய அறிமுகத்துக்கும் ஆழ்ந்த இலக்கிய ரசனைக்கும் இது உதவி புரிந்தது. சுமார் இரண்டு வருட காலம் வெளிவந்தது.

எழுத்தும் இலக்கிய வட்டமும் பின்னர் தோன்றிய சிறு பத்திரிகைகளுக்கு உந்துசக்திகளாக அமைந்திருந்தன என்று சொல்லலாம்.