பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் 59 முற்போக்கு இலக்கிய நோக்கில் நடைபெறும் மற்றுமொரு பத்திரிகையாக செம்மலர் வந்து கொண்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கட்சி நடத்தும் மாதப் பத்திரிகை செம்மலர். சின்னப்ப பாரதியின் தாகம், டி. செல்வராஜின் மூலதனம் ஆகிய நாவல்கள் செம்மலரில் தொடர்கதைகளாக வெளிவந்தவைதான். அச்சுக்கலையும் பிரசுரவசதிகளும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிற தற்காலத்திலும் - லட்சக்கணக்கில் பிரசுரமாகி வருகிற வணிகநோக்குப்பத்திரிகைகள் போட்டி வேகத்தில் பெருகிக் கொண்டிருக்கிற இந்நாளையிலும் - இலக்கியப் பத்திரிகைகள் குடிசைத்தொழில் முயற்சிகள் போல் சோனிகளாகத்தான் தோற்றம் தருகின்றன. வாசகஉலகம் பல்கிப் பெருகி விசாலித்து இருப்பினும், தரம் உணர்ந்து இலக்கிய ஈடுபாட்டுடன் படிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே இதற்குக் காரணம் ஆகும்.

இதனாலேயே மணிக்கொடியும் சரி, மணிக்கொடி வழியில் வந்த இதர இலக்கியப் பத்திரிகைகளும் சரியே, திடகாத்திரமாக வாழ்ந்து தீவிர இலக்கியப்பணியைத் தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நிலைமைதான் இன்றும் நீடிக்கிறது.

ஆயினும், தனிஇலக்கிய நோக்குகளைப் பிரதிபலிக்கும் தன்மையிலும், சமுதாயப் பார்வை முற்போக்குச் சிந்தனை என்று அரசியல் தத்துவச் சார்பைக் காட்டும் விதத்திலும் தோன்றுகிற பத்திரிகைகள் தனிச்சுற்றுக்கு மட்டும் எனக்கூறிக் கொண்டு தனக்கு உரிய ரசிகர்களைத் தேடிச்செல்வது கால நியதியாகியிருக்கிறது.

இத்தன்மையில் இன்று வெளிவருகிற இலக்கியப் பத்திரிகை களில் மீட்சி என்ற மாதஇதழ் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது ஆகும். புதியகவிதை சோதனைப் படைப்புகளையும், உலகக்கவிஞர்களது படைப்புகளின் தமிழாக்கங்களையும், புதுரகச் சிறுகதைகளையும் வெளியிடுகிற மீட்சி உதகமண்டலத்திலிருந்து வெளிவருகிறது.

‘யாத்ரா என்ற சிறுபத்திரிகை தனித்தன்மை பெற்றுள்ளது. காரசாரமான இலக்கிய விமர்சனங்கள், ஆய்வுக் கட்டுரைகள், நாடகக்கலை, தெருக்கூத்து சம்பந்தமான விரிவான கட்டுரைகள் யாத்ராவில் வந்துள்ளன. உரிய கவனிப்புப் பெறாது காலவெளியில் மறைந்துபோன சில படைப்பாளிகள் இலக்கியவாதிகளின் ஆற்றலையும் பணிகளையும் ரசிகர்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிற சிறப்பு மலர்களையும் யாத்ரா பிரசுரித்திருக்கிறது.

இப்படியாக இலக்கிய உணர்வும் ஊக்கமும் உற்சாகமும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. பொன்னேர் பூட்டி தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு மணிக்கொடி இட்ட வித்து, முளைத்து