பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்தாளர் நண்பர் எஸ்.பொ அவர்களின் அன்பும் துண்டுதலும் தான் இதை சாத்தியமாக்கியுள்ளது. அவருக்கு என் நன்றி.

பல்வேறு காலங்களில், பலப்பல இதழ்களில் வெளிவந்து சிதறிக்கிடக்கும் எண்ணற்ற கட்டுரைகளிலிருந்து ஒருசில கட்டுரைகள் மட்டுமே இங்கு, தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன.

சிந்தனைக் கட்டுரைகள், வர்ணனைக் கட்டுரைகள், நையாண்டிக் கட்டுரைகள், புத்தகங்கள் மற்றும் நூலாசிரியர்கள் பற்றிய கட்டுரைகள், இதழியல் கட்டுரைகள், இலக்கியம் சம்பந்தமானவை, கவிதைகள் மற்றும் கதாபாத்திரங்கள் பற்றியவை, பொதுவான விஷயங்கள் பற்றிய கட்டுரைகள், மனிதர்களின் குணவிசித்திரங்கள் மற்றும் கால மாறுபாடுகள் குறித்த கட்டுரைகள் இப்படி எத்தனையோ வகையான கட்டுரைகளை எழுதியுள்ளேன். அவற்றில் "மாதிரிக்குச் சில” என்ற தன்மையில், குறைந்த அளவிலான கட்டுரைகளே இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.

ஏற்கனவே பத்திரிகைகளில் பிரசுரம் பெற்றிராத கட்டுரைகளும் இத்தொகுப்பில் உள்ளன.

புதுமைப்பித்தனின் விமர்சனப்பார்வை என்ற கட்டுரை, புதுடில்லியில் சாகித்ய அகாடமி, அகில இந்திய அளவில் ஒரு வருடம் ஏற்பாடு செய்திருந்த புதுமைப்பித்தன் நினைவுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது ஆகும்.

அதேபோல, புதுமைப்பித்தனின் புதுமைகள் என்பது சென்னையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரை.

இத்தொகுப்பில் உள்ளவை வெவ்வேறு காலங்களில் எழுதப் பட்ட கட்டுரைகள் ஆயினும், தற்காலத்துக்கும் எக்காலத்துக்கும் பொருத்தமானவையேயாகும். இன்றைய வாசகர்களும் இனி வரக் கூடிய வாசகர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி இக்கட்டுரைகள் பேசுகின்றன.

மணிக்கொடிக்குப்பின் இலக்கியப் பத்திரிகைகள், தற்கால இலக்கியத்துக்குச் சிற்றிதழ்களின் பங்கு, இலங்கைஇதழ்கள் ஆகியவை இதழியல் வரலாற்றுப் பதிவுகள் ஆகும். இக்கட்டுரைகள் 1980களில் எழுதப்பட்டதால், அக்காலக்கட்டத்துக்குப் பிந்திய சிற்றிதழ்கள் கவனிப்புப் பெறவில்லை.

சரித்திர நாவல் பற்றிய கட்டுரையும், பிரேம்சந்த், கற்பனைச் சுழலில் கதாபாத்திரம் ஆகியவும் இலக்கியச் சிந்தனைகளாகும். "தொடர்கதைகள் அங்கதம் கலந்த சிந்தனைக் கட்டுரை.