பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு காதல் கதை - 99

அந்தப் பழத்தைக் கல்லால் அடித்து விழவைப்பதை விட, மேலே ஏறிப் போய் கையால் பறித்து எடுத்து வந்து அவளிடம் கொடுப்பதே சிறப்பானதாகும் என்று அவன் எண்ணியிருக்கலாம். மரங்களில் ஏறி இறங்குவதில் பெரிய சூரன் தான் அவன். ஆனால் அன்று விதி அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்ததை யார் தான் அறிவார்கள்?

ஆசைத் துடிப்போடும் அளவற்ற தன்னம்பிக்கையோடும் வேகமாக ஏறிய சந்திரன் அஜாக்கிரதையாகக் கால் வைத்ததனால் மரத்திலிருந்து தவறிக் கீழே விழுந்தான். அதிக உயரத்திலிருந்து விழுந்ததால் முதுகில் நல்ல அடி. ஒரு காலிலும் அடி. உரிய முறையில் சிகிச்சைகள் நடந்தன. ஆனாலும் கால் ஊனமாகி அவன் நொண்டி ஆனது தான் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. சந்திரன் படுக்கையில் விழுந்து கிடந்த போதெல்லாம் ஆனந்தவல்லி கண்ணீர் வடித்து சோக சித்திரமாக மாறியிருந்தாள். அவன் குணமடைந்து விட்டான் என்று தெரிந்ததும் தான் அவள் உற்சாகம் பெற்றாள்.

ஆனால், சந்திரனின் உள்ளம் உற்சாக உணர்வைப் பறிகொடுத்து விட்டதாகத் தோன்றியது. அவன் சுத்தசுய நலமியாக இருந்திருந்தால் அவன் உள்ளம் வீண் வேதனையை வளர்த்திருக்காது தான். சந்திரன் ஆனந்தவல்லியிடம் புனிதமான அன்பு கொண்டிருந்தான். அவனுடைய ஆசை உயர்ந்தது. அதனால் அவன் தனது நிலைமையையும், தன்னோடு வாழ்க்கை முழுவதம் துணை சேர்ந்து அவளது வருங்காலத்தை குறை உடையதாகவும் நரக வேதனை பெற்றதாகவும் மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிற தனது ஆசைக் கிளியின் வாழ்வு பற்றியும் தீவிரமாகச் சிந்தித்தான். 'அன்பே, நீ என்னையே மணந்து கொள்ள வேண்டும் என்கிற அவசியம் எதுவும் இல்லை. நாம் வளர்த்த இன்பக் கனவுகள் எல்லாம் நிறைவேற முடியாதபடி காலம் வஞ்சித்து விட்டது. நாம் கட்டிய ஆசைக் கோட்டைகள் எல்லாம் ஆகாசக் கோட்டைகள் ஆகிவிடும். நொண்டியைக் கல்யாணம் செய்து கொண்டு நீ என்ன சுகம் காணப்போகிறாய்?’ என்று அவளிடமே சொல்லிவிட்டான் சந்திரன்.

அவளுக்கு, அவன் நொண்டியானதை விட, இப்படிப் பேசியதுதான் அதிக வேதனை தந்தது. அவள் தன் பூங்கரத்தால் அவன் வாயைப் பொத்தினாள். 'இது மாதிரி எல்லாம் நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்?’ என்று வேதனையோடு சொன்னாள்.

அவள் கெஞ்சியதற்கு இணங்கி, சந்திரன் அவ்வாறு பேசுவதை விட்டுவிட்டான். ஆனால் வேதனையோடு எண்ணி