பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1○○ வல்லிக்கண்ணன் கதைகள்

எண்ணி மணம் குமைவதை ஆசைக்கு இனியவள் கூடத் தடுத்துவிட முடியாது அல்லவா?

அவன் எண்ணி மனசைக் குழப்பிக் கொண்டான். எப்படிப் பார்த்தாலும், அவன் அவளுக்குச் சுமையாகத்தான் இருக்க முடியும் என்றே அவனது உள்ளம் உறுத்தியது. அப்படி வாழ்ந்து, அவளது இனிய வாழ்வையும் கெடுத்துக் குட்டிச் சுவராக்குவதை அவன் விரும்பவில்லை. ஆகவே, தனது காதலி ஆனந்தவல்லிக்கு நல்லது செய்வதாக நம்பிக் கொண்டு சந்திரன் மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்து, தனது உயிரைத் தியாகம் செய்து கொண்டான். அவன் இரட்டைத் தியாகி இல்லையா? காதல் தியாகியான சந்திரன் உயிர்த்தியாகியும் ஆனான். இவ்வளவு தான் கதை என்று கூறி முடித்தது பொம்மை.

'எஹெஹெ! இதுவும் ஒரு கதையா!' என்று கனைத்தது என் மனக்குறளி.

'இதுக்கு என்னவாம்? இதில் காதல் இருக்கிறது. காதலின் உயர்வு தெரிகிறது. தனது அன்புக்கு உரியவளுக்கு இன்பம் அளிப்பது மட்டும் காதலின் நோக்கமல்ல; தன்னால் அவளுக்குத் துன்பமும் நீடித்த வேதனையும் ஏற்படும் என்று தெரிந்தால், அப்படி ஒரு நிலைமை ஏற்படாமல் தவிர்க்கவும் தூண்டும் உண்மையான காதல்...'

'காதலன் தற்கொலை செய்து கொண்டதால், காதலி சந்தோஷப்பட்டு விடுவாளாக்கும்? ஆனந்த வல்லிக்கு ஆனந்தமே இல்லாமல் செய்து விட்டாயே! எல்லோருக்கும் காதல் கதை பிடிக்கும் தான். ஆனால் எப்போதுமே கதை முடிவு இன்பமயமானதாக இருக்க வேண்டும். வாசகசிகாமணிகள் அதைத்தான் விரும்புகிறார்கள். உனது கதை பக்கத்து வீட்டுப் பன்னிரண்டு வயசுப் பெண்ணுக்குக் கூடப் பிடிக்காது!’ என்றேன்.

'ஹூம்ப்!' என்று வெறுப்போடு குரல் கொடுத்தது பொம்மை. தனக்குக் கதை சிருஷ்டிக்க முடியாத வறட்சி ஏற்பட்ட நிலையிலும், மற்றவர்கள் கதையை மோசம், மட்டம், குப்பை என்று கண் மூடித்தனமாக விமர்சனம் செய்வதில் மகிழ்வு காண்கிற இலக்கிய பிரம்மாக்களின் கும்பலைச் சேர்ந்தவன் தானா நீயும்? போயும் போயும் உன்னைத் தேடிப் பிடித்தேனே எனது அற்புதமான கதையைச் சொல்வதற்கு!’ என்று முனகியது மேஜை மீதிருந்த புதுமை.

அப்புறம் அது பேச்சு மூச்சு காட்டவே இல்லை.