பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேபி 106

ஆசைதான், ஆனால் அம்மாவும் பாட்டியும் தான் வேண்டாமென்று தடுத்துவிட்டார்கள். சில மாதங்கள் பாட்டி வீட்டில் தங்கிவிட்டு, இப்போதான் இங்கு வந்திருக்கிறாள். வந்து நாலைந்து நாட்களேயாச்சு. அவள் இல்லாமல் வீடே வெறிச் சோடிக் கிடந்தது. இப்பதான் வீடு கலகலப்பாக ஜீவனோடு விளங்குகிறது. இப்படி விவரித்தார். -

கைலாசம் அவ்வப்போது மென்சிரிப்பும்; 'ஊம், ஊம்’ எனும் குரலும், தலையசைப்பும் கொடுப்பது தவிர வேறென்ன சொல்ல முடியும்? அவற்றை தாராளமாக வழங்கி, ஆசிரியருக்குப் பிடித்த 'நல்லபிள்ளை'யாக நடந்து கொண்டான்.

தந்தையின் பேச்சு முடியும் மட்டும் மறைந்து நினிற பேபி வாய் திறவாது அசைந்து நகர்ந்து வந்தாள். வெள்ளி டம்ளரில் காபி எடுத்து வந்தாள், மதிப்பு மிக்க அமிர்தத்தைத் தூக்கி வரும் மோகினி போல. தந்தையருகே வந்துநின்று 'ஊம்ம்' என ஒலிக் குறிப்புத் தந்தாள்.

'அவரிடம் கொடம்மா!' என்று அன்பாகச் சொன்னார் பரமசிவம். -

பேபி சிறிது நகர்ந்து முன் வந்து, கை நீட்டி, 'இந்தாங்க காபி' என்று மழலை மொழிந்து, கைலாசத்திடம் அளித்தாள். எல்லாமே ஏதோ ஒரு நாட்டியத்தின் பாவனைகள் போலத்தான் தோன்றின. அவனுக்கு.

அவன் டம்ளரைப் பெற்றுக் கொள்கிறபோது அவள் முகத்தைப் பார்த்தான். அவளுடைய மாதுளை மொக்கு உதடுகளில் மென்முறுவல் சுழியிட்டது. கண்ணாடிக் கன்னங்களில் செம்மை சாயமேற்றியது! கண்களில் மிதந்த பார்வை -

'சிறு பெண் எப்பொழுது பெரியவளாகிறாள்? அவளுடைய கண் பார்வையில் விசேஷமான அர்த்தங்கள் தேங்கித் தென்படுகிறபோது! இப்படி அவன் என்றோ எங்கோ படித்திருந்த நயமான சிந்தனைக்கு ரசமான விளக்கம் காட்டின பேபியின் கண்கள்,

அவன் முகம் மலர்ந்தது. அதன் நிழல்வீச்சுப் போல அவள் முகம் முழு தலர்ந்தது. அவள் தந்த காப்பி அமிர்தமாகத் தான் ருசித்தது அவனுக்கு.

பேராசிரியர் 'போரடிப்பு' விருந்து நடந்தினார். தான் அறிந்த அற்புதங்கள், கண்டெடுத்த நயங்கள், உணர்ந்த இலக்கிய உண்மைகள், அபூர்வமாக அவர் எழுதிய எண்ண மணிகள் பற்றி எல்லாம் மிகுந்த ஈடுபாட்டோடு பேசினார்.