பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேபி 1O7

தந்தையிடம் எதையாவது அர்த்தமின்றிக் கேட்டு, காரணம் இல்லாமல் சிரித்து, தேவையில்லாமலே பேச்சுக் கொடுத்து, தான் அங்கிருந்ததை சதா உணர்த்திக் கொண்டிருந்தாள். கைலாசம் விடை பெற்றுப் புறப்பட்டபோது, முகத்தில் வாட்டம் காட்டி முன்வந்தாள்.

'அடிக்கடி வா, கைலாசம். வராமலே இருந்துவிடப் போகிறே!' என்று பரமசிவம் வற்புறுத்திச் சொன்னதும், மகளின் முகத்தில் திருப்தி ஊர்ந்தது. அதே அழைப்பை அவள் விழிகள் சுமந்து படபடத்தன.

'வாரேன் ஸார், வராமலென்ன!' என்று அவன் சொன்னதும் அவள் குதுகலித்தாள். குதித்தோடி மறைந்தாள்.

அவனை வழியனுப்பிவிட்டு 'குழந்தையோடு' பேசி மகிழ்வதற்காகப் பரமசிவம் உள்ளே போனார். நல்லகுழந்தை வந்து சேர்ந்தது, பச்சைக் குழந்தை! சின்னப் பாப்பா!' என்று கைலாச மனக்குறளி கனைத்துக் கொண்டது.

கைலாசம் இரவலாக வாங்கிவந்த புத்தகத்தைத் திரும்பக் கொடுப்பதற்காக ஒருநாள் பேராசிரியர் வீடு தேடிச் சென்றான். அன்று முன்கதவு சும்மா தான் அடைக்கப்பட்டிருந்தது. அவன் கைவைத்துத் தள்ளியதுமே அது திறந்துகொண்டது. உள்ளே அடி எடுத்து வைத்ததும் அவன் 'ஆகா, அற்புதம்!' என்று வியக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. -

முன் அறையில் பேபி குதித்து ஆடிக் கொண்டிருந்தாள். வெறுமனே அல்ல. கைகளில் ஒரு நூல் கயிற்றைப் பற்றி, அதைத் தலைக்கு மேலும் பாதங்களின் கீழுமாகச் சுற்றிச் சுழற்றி, கயிற்றில் கால்கள் சிக்கிவிடாதபடி சாமர்த்தியமாகத் தாவித்தாவி 'ஸ்கிப்பிங்' ஆடிக் கொண்டிருந்தாள். தன்னந் தனியாகத்தான். அந்த ஆடலில் அவளுக்கு நல்ல பயிற்சியும் தேர்ச்சியும் உண்டு என்பதை அவளது ஒவ்வொரு துள்ளலும் நிரூபித்தது.

கைலாசம் கதவைத் திறந்துகொண்டு பிரவேசித்த போது, பேபியின் பின்புறத் தோற்றமே அவன் பார்வையில் பட்டது. அதுவும் கண்டு களிக்க வேண்டிய இனிய காட்சியாகத் தான் இருந்தது. அதை ரசித்தவாறே அவன் மெளனமாய் நின்றான்.

அவள் சடக்கென்று துள்ளித் திரும்பினாள். அவளது பாவாடைச் சுழற்சியும், பின்னலின் துவள்தலும், உடலும் குதிப்பும் அவனை மகிழ்வித்தன. அப்பொழுதுதான் அங்கே நின்று தன்னையே கவனித்துக் கொண்டிருக்கும் கைலாசத்தை