பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேபி 111

அலசிப் பிழிந்து விவரிக்கிறார்கள். ஆனால் தன் மகளின் உள்ளத்தை உணரும் திறமை பெறவில்லை என்றே தோன்றுகிறது. ஸார்வாளின் அறிவையும் ஆராய்ச்சித் திறமையையும் தந்தையின் பாசம் எனும் ஒட்டடை மூடிக்கொண்டது போலும்!” என்று கைலாசத்தின் மனக்குறளி எடை போட்டது ஒரு சமயம்.

அது சரியான கணிப்புதான் என்றே காலம் உறுதிப்படுத்தியது.

கைலாசத்துக்கு வழக்கமாகப் பற்றுகிற ஒரு கோளாறு இப்பொழுதும் திடீரென்று ஏற்பட்டது. "மனசு சரியில்லை’ எனும் நோய்தான் அது. அகத்திலும் புறத்திலும் நிலவுகிற வரட்சியால் தூண்டப்படும் அந்த வியாதிக்கு அவன் அறிந்த மாற்று 'ஊர் வழி போவது'ம், பல மாத காலம் வெளியூரிலேயே தங்குவதுமாகும்.

இம்முறையும் அவ்விதமே திட்டமிட்டு, தனது எண்ணத்தைப் பேராசிரியரிடம் தெரிவித்து விட்டு அவன் வெளியேறினான். வாடிய முகத்தோடு ஏக்கப் பார்வையை அவன் பக்கம் ஏவி நின்ற பேபியின் தோற்றம் கைலாசத்தின் உள்ளத்தில் கிளர்ச்சி உண்டாக்காமல் இல்லை. எனினும் அவன் அதைப் பெரிது படுத்தவில்லை.

பிறகும், பிரயாண முன்னேற்பாடுகளில் முனைந்திருந்த அவன் உள்ளத்தில் பேபியின் நினைவு மேலோங்கி நிற்கவில்லை. ஆகவே நீல வானத்திலிருந்து நேராக இறங்கி வந்த தேவ கன்னிகையைப் போல அவள் வந்து நின்றதும் - கைலாசம் சற்று அயர்ந்துதான் போனான். 'இவளை விட்டு விட்டு எப்படிப் போவதாம்?' எங்கே போவதாம்?’ என்று முனங்க ஆரம்பித்தது அவன் மனக்குறளி - இலேசாக! அவன் புறப்படும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக பேபி வந்து நின்றதும் கைலாசம் திகைப்புற்றான். கையில் ஒரு பையுடன் காட்சி தந்தவளைக் கண்டதும், 'எங்கே கிளம்பிவிட்டாய் பேபி? பஜாருக்கா?' என்று கேட்டு வைத்தான்.

'ஊகும்' என்று தலையசைத்த பேபியின் புரளும் விழிகள் பேசிய பாஷை அவனுக்கு உணர்வுக் கிளர்ச்சி ஊட்டுவதாகத்தானிருந்தது. அவள் தரையைப் பார்த்தாள். மோட்டைப் பார்த்தாள். நாணியும் கோணியும் நேராகவும் பார்த்தாள்.

'என்ன பேபி, என்ன விஷயம்?' என்று துடிப்புடன் கேட்டான் அவன்.

அவள் மென்னகை புரிந்தாள். 'நானும் வருவேன்' என்றாள்.

ஆச்சரியத்தோடு அவன் 'எங்கே?' என்று விசாரித்தான்.