பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேபி 113

மேலும் அவளை எதிர்த்துப்பேசவோ, தட்டி விலக்கவோ அவனிடம் வலு இல்லை. 'வாழ்க்கையின் வறட்சி இந்தக் குளிர் பூஞ்சுனையினால் நீங்கிவிடும். புதுமலர்ச்சிப் பிறக்கும்’ என்று முனங்கியது அவன் மனக்குறளி.

அவள் இடுப்பில் கைவைத்து அவளை இன்னும் அருகில் இழுத்தபடி, ஆசைப் பார்வையை அவள் முகத்தில் பதித்து அவன் அன்போடு கேட்டான்: 'சரி பத்மா! உன் அப்பா என்ன சொல்வார்? அம்மா கோபிக்க மாட்டாளா?'

'ஊகுங்' என்று தலையசைத்தாள் அழகி. 'என் அப்பா எனது இஷ்டத்துக்கு எதிரே நிற்கமாட்டார். அம்மா கோபித்தால் என்ன? பிறகு இணங்கி விடுவாள்!'

'அப்போ புறப்படு' என்றான் கைலாசம்.

‘ரயிலுக்குத் தானே?’ என்று கேட்ட பேபி, ஆசைத் துடிப்போடு அவன் முகத்தை, நிமிர்ந்த தன்முகம் நோக்கித் தாழ இழுத்தாள்.

ஒரு கணத்துக்குப் பிறகு தான் அவன் பதில் சொல்ல முடிந்தது. 'ஹூஹூம். உன் அப்பாவிடம் தான். நாம் இருவரும் சேர்ந்து நமது கருத்தை அறிவித்தால் அவர் நம் தவறை மன்னித்து விடுவார். நமது எண்ணத்தை மகிழ்ந்து ஏற்றுக் கொண்டு பாராட்டினாலும் பாராட்டுவார். பேராசிரியர் ரொம்ப நல்லவர்' என்றான்.

பரமசிவம் கைலாசத்தின் நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்கவில்லைதான். முதலில் அவர் திகைப்படைந்தார். பிறகு திருப்தியே கொண்டார். 'பேபி எனக்கு வீண் சிரமம் வைக்காமல் நீயாகவே உன் வருங்காலத்துக்கு நல்ல வழி வகுத்துக் கொண்டாய் போலும் ரொம்ப சந்தோஷம்' என்றார். இது வந்து எனக்கு எதை ஞாபகப்படுத்துகிறது என்றால்...' என்று இலக்கிய நயம் எதையோ எடுத்துச் சொல்லி விளக்கத் தவித்தார் அவர்.

அவருடைய பேச்சு இப்போது கைலாசத்துக்கு வெறும் போரடிப்பாகத் தோன்றவில்லை. அது பெரும் தொண தொணப்பாகவே இருந்தாலும் கூட அதை ஆனந்தமாகக் கேட்டு ரசிக்கத் தயாராக இருந்தான் அவன். கையை அன்போடு பிடித்துக்கொண்டு பேபி அருகிலேயே நிற்கிற போது அவனுக்கு எல்லாம் இன்பமயமாகத் தோன்றாமல் வேறு எப்படி இருக்குமாம்?