பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காதல் போயின்?

மாறி ஆடும் பெருமாள் பிள்ளைக்குக் கோபம் என்பது வரவே வராது! அவரை நன்கு அறிந்தவர்கள் இப்படிச் சொல்வது வழக்கம்.

'ஐயா, உம்முடைய பெயர் மாரியாடும் பெருமாள் என்றே எழுதப்பட வேண்டும். அதாவது, மாரியம்மன் வந்து ஆடுகிற பெரிய ஆள்! அதை விட்டுப் போட்டு, நீர் மாறியாடும் என்று எழுதுவதன் வயணம் என்ன? ஆட வேண்டிய பூடத்தை விட்டு விட்டு இடம் மாறி ஆடிய பெருமாளா? அல்லது ஒரு காலில் நின்று ஆடிக் களைத்து அப்புறம் கால் மாறி ஆடும் பெருமான் என்று அர்த்தமா?' என்று பிள்ளை அவர்களின் நண்பர் சுப்பையா முதலியார் வேடிக்கையாகவும் வினையாகவும் பேசுகிறபோது கூட அவர் கோபம் கொள்வது கிடையாது. 'உங்களுக்கு வேலை என்ன?’ என்று சிரித்து மழுப்பி விடுவார்.

அவ்வளவு தங்கமான மனிதரைக் கூட, பேயாக மாறி உக்கிரமாக ஆட வைக்கும் 'மந்திரம் போல் ஒரு சொல்' இருக்கத்தான் செய்தது. பிள்ளை அவர்களின் முன்னிலையில் 'காதல் போயின் சாதல்’ என்று சொன்னால் போதும், அவர் நிஜமான மாரியம்மன் கொண்டாடியாகவே மாறி விடுவார்.

'காதல் போயின் சாதலாம்! வெங்காயம் போனால் பெருங்காயம்! போங்கடா முட்டாள் பயல்களா! காதலித்து வாழ்வது என்று கிளம்புகிற இரண்டு பேர் வாழ முடியவில்லையாம். அப்புறம் இரண்டு பேர் சேர்ந்து சாவது மட்டும் எப்படி நிச்சயமான வெற்றிச் செயலாக முடியுமோ தெரியவில்லை. வாழ்வது நம் கையில் இல்லை என்றால், சாவது மட்டும் நம் இஷ்டம்போல சித்தியாகக் கூடிய விஷயமாகவா இருக்கிறது!’ என்ற ரீதியில் கனல் கக்கத் தொடங்குவார் அவர்.

இதற்குக் காரணம் மாறியாடும் பெருமாளை, ஏமாறிவிடும் சிறு பிள்ளையாக மாற்றிய காதலி எவளாவது இருந்திருக்கலாம் என்று எண்ணுகிறவர்கள் உண்மையை விட்டு விலகியே செல்கிறார்கள். அவருடைய மூத்த புதல்வன் மகிழ்வண்ண நாதன் தான் பிள்ளையைச் சீறி ஆடச் செய்யும் மகுடிநாதமாக வந்து வாய்த்தான்.

அவன் அவ்வாறு செயல் புரிவான் என்று பிள்ளை அவர்கள் கனவில் கூட எண்ணியதில்லை. 'கல்லுளிமங்கன்’ எனப்