பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116 வல்லிக்கண்ணன் கதைகள்

நிலைமை முற்றி நெருக்கடியாக மாறுகிறவரை பிள்ளை அவர்களுக்குப் பையனின் காதல் விவகாரம் தெரியவே தெரியாது. எல்லாம் முற்றிவிட்ட பிறகு சீறி விழுவது தவிர அவர் வேறு எதுவும் செய்ய முடியாத பராபரமாகி விட நேர்ந்தது. சீறினார், சிடுசிடுத்தார். 'மட சாம்பிராணி! காதலிக்கத்தான் காதலித்தானே - பெரிய இடத்துப் பெண்ணாக, பணக்காரன் மகளாகப் பார்த்துக் கர்தலிக்கப்படாது? பெரிய பண்ணை சீனிவாசம் பிள்ளை மகள் இல்லையா? கொளும்புப் பிள்ளைவாள் பேத்தி, மெத்தை வீட்டு ராமானுஜம் பிள்ளையின் மகள் - பெண்களா இல்லாமல் போனார்கள்? இவன் விடியா மூஞ்சி லட்சுமியின் மகள் சீதை மேலே எனக்குக் காதல் என்று முரண்டு பண்ணுகிறானே' என்று முணமுணத்தார்.

ஆரம்ப கட்டத்திலேயே விஷயம் அவருக்குத் தெரிய வந்திருக்குமானால், 'டே பையா! காதல் கீதல் என்பதெல்லாம் சரிதான். அது கல்யாணம் பண்ணுவதற்கு முந்தித் தான் வர வேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் கிடையாது. கல்யாணம் ஆன பிறகு, கல்யாணம் செய்து கொள்கிற பெண் மீதும் காதல் ஏற்படலாம். நீ காதலியை மனைவியாக மாற்ற ஆசைப்படாமல், உனக்கு வாய்த்த மனைவியைக் காதலித்து உருப்படு. சந்தோஷமாக இரு!’ என்று போதித்திருப்பார். வெறும் போதனையுடன் நின்று விடாமல், பணமும் நகையும் சொத்தும் சுகமுமாக வரக் கூடிய ஒரு பெண்ணையும் அவனுக்குக் கட்டி வைத்து மகிழ்வடைந்திருப்டார்.

ஆனால், அவர் வீட்டில் நடந்ததே அவருக்குத் தெரியாமல் போயிற்றே! அவருடைய தங்கை லட்சுமி அம்மாள் விதவையாகி, போக்கிடமின்றி, அண்ணனே கதி என்று நம்பி வந்து பிள்ளை அவர்களுடைய வீட்டிலேயே தங்கி விட்டாள். சமையல் வேலை முதல் சகல அலுவல்களையும் செய்து தான் அவள் வயிறு வளர்த்து வந்தாள். அவள் சூழ்ச்சி செய்து வீட்டிலே அதிகாரம் பெற்று ஆக்கினைகள் பண்ணுவதற்காகவே தன் மகளை மகிழ்வண்ணநாதனுக்குக் கல்யாணம் செய்யத் திட்டமிட்டிருக்கிறாள் என்றே பெரிய பிள்ளை கருதினார். ஆனால் அவருடைய மகனின் பிடிவாதத்துக்கு லட்சுமி அம்மாள் துண்டுலுமல்ல; துணையுமல்ல.

'சீதை இல்லாமல் என் வாழ்க்கை வாழ்க்கையாக இராது. எனது வாழ்வில் ஒளி புகுத்தக் கூடியவள்,அவள் தான்' என்று அவன் உறுதியாக அறிவித்தபோது முதன் முதலாக அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தவள் அவள் தான். 'விஷயம் இவ்வளவு தூரத்துக்கு வளர்ந்துவிடும் என்று எனக்குத் தெரியாமல் போச்சுதே' என்று அவள் தலையில் அடித்துக் கொண்டாள்.