பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் போயின்? 117

அந்த உண்மை - சீதை தனது துணைவியாக வந்தால்தான் வாழ்க்கை இனிமை மிகுந்த மலர்ச் சோலையாக அமையும் என்கிற ஞானம் - மகிழ்வண்ணநாதனுக்குப் பிடிபடுவதற்கே வெகு காலம் ஆயிற்றே! மற்றவர்களுக்கு அது முதலிலேயே விளங்காமல் போனது அதிசயமில்லைதான்.

கிழ்வண்ணநாதனுக்கு அத்தை மகள் சீதையிடம் சின்னஞ் சிறு பிராயம் முதலே அன்பும் ஆசையும் இருந்ததாகச் சொல்ல முடியாது. சீதை சூரியன் குஞ்சாகப் பிறக்கவுமில்லை; சந்திரன் குஞ்சாக வளரவுமில்லை. 'மூதேவி! மூஞ்சியைப் பாரு! பனங்காய் மோரை!' என்றெல்லாம் அவனே பலமுறை பழித்திருக்கிறான். அத்தை மகள் என்ற உரிமையோடும், ஒருவித இளக்காரத்தோடும். அலட்சியமாக மதித்துக் கேலி பேசி அவளை அழ அழ வைத்திருக்கிறான். அந்தப் பெண்ணும் ஏச்சுக்கு ஏச்சும், பேச்சுக்குப் பேச்சும், சில சமயம் அடியும் கிள்ளும் கொடுப்பதற்குத் தயங்கியது இல்லை. அப்போது அவளிடம் அவனுக்கு ஆசையுமில்லை; நேசமும் இல்லை.

பாவாடையை அவிழ்த்து அவிழ்த்துக் கட்டிக் கொண்டு, திண்ணைக்கும் மண்ணுக்கும் தாவியவாறே, 'குரங்கே குரங்கே குற்றாலத்துக் குரங்கே! கொம்பை விட்டு இறங்கேன்’ என்று கத்திக் கொண்டு, தோழிகளோடு குதியாட்டம் போட்ட போதெல்லாம், அவன் பார்வையில் அவளும் ஒரு குரங்காகத் தான் தோன்றினாள். கண்ணாம் பூச்சியும், ஒடிப் பிடித்தலும் ஆடிக் களித்த அத்தை மகள் அவன் கண்களுக்குக் கொடியாகவோ மயிலாகவோ காட்சி அளித்ததில்லைதான்.

பச்சைப் பசிய வயலில் தலையெடுத்துக் காற்றிலே தவழ்ந்தாடும் "மூப்பன் கதிர்' மாதிரி, பருவம் அடைய வேண்டிய பிராயத்தில் சீதையும் தள தள வென்று வளமும் வனப்பும் பெற்றுத் திகழ்ந்தாள். பதின்மூன்று - பதினான்கு வயசுப் பாவாடை தாவணிப் பருவத்துக் குட்டி, வாலிபனாக வளர்ந்து கொண்டிருந்த மகிழ்வண்ணநாதனின் கண்களைக் கவர்ந்தாள். ஆயினும் கருத்திலே நிலையான இடம் பெற்றாளில்லை.

ஒரு சமயம் அவளுடைய சிநேகிதி ஒருத்தி சீதையைச் சீண்டுவதற்காக 'அத்தான் பொத்தக்கடா, அழகுள்ள பூசனிக்காய்!' என்று வாயாடினாள். சீதை சீறினாள். 'எங்க அத்தான் அப்படி ஒண்ணும் வண்டி கொள்ளாதபடி தண்டியும் சதையுமாக இல்லை. அவர் பொத்தக்கடாவுமில்லை; பூசனிக்காயுமில்லை என்று வெடுவெடுத்தாள்.