பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் போயின்? 119

'மான்களும் மயில்களும், வானவில் வர்ணஜாலம் காட்டும் மேனியரும் 'பொம்மெனப் புகுந்து மொய்க்கும்' இனியதோர் உலகமாக மாறியிருந்தது. வசந்த மண்டபம். பகலில் சோலைகளிலும் நந்தவனங்களிலும் தனது ஆற்றலைக் காட்டும் வசந்தம் முன்னிரவிலே அந்த இனிய சூழலில் கொலுவிருந்தது போலும்!

திடீரென்று அதோ பார் மகிழம்! ஒரு அழகி உன் மீது வைத்த கண்ணை மீட்க மறந்து போனாள்!’ என்று நண்பன் உரைக்கவும், மகிழ்வண்ணநாதன் அத்திசையில் தன் விழியை எறிந்தான்.

அகல் விளக்குகளிடையே ஒரு குத்து விளக்குப் போலும், மலர்க் குவியல்கள் மத்தியில் ஒரு ரோஜா போலும் திகழ்ந்தாள் அவள். 'யார்? நம்ம சீதையா? என வியப்புற்றது அவன் மனம். 'ஆகா!' என்று அதிசயித்தது ரசனை உள்ளம். அவன் முகம் மலர்ந்து தன்னைக் கவனித்து நிற்பதை உணர்ந்ததும் அவளுடைய அகன்ற பெரிய விழிகள் கயலெனப் புரண்டன, மீண்டும் அவன் மீது மோதவதற்காக, அந்தப் பார்வை தான் அவனை 'இடர் செய்தது!' அவன் உள்ளத்தில் அவள் இடம் பிடித்து விட்டாள்.

அவள் நின்ற நிலையை, அசைந்த அசைவுகளை, அவளது மோகனப் பார்வையை, முகத்தின் அழகை, விழிகளின் சுடரொளியை அவன் மறக்கவேயில்லை. அதன் பிறகு அவளே ஒரு படையெடுப்பாக விளங்கினாள். அவனை வென்று விட்டாள். அவளைத் தன்னவளாக்கிக் கொள்ளத் தவித்தான் அவன், சந்தர்ப்பங்கள் அவனது பார்வைக்கு விருந்தளித்தன. ஆசையைத் துண்டி வந்தன.

இவை எதுவும் மாறி ஆடம்பெருமாள் பிள்ளைக்குத் தெரியாது. அவர் தமது மூத்த குமாரனுக்கு, பெரும் பணக்காரரான திருமலைக்கொழுந்துப் பிள்ளையின் மகளை மணம் முடித்து வைக்க முன் வந்தபோதுதான், பையன் பெரிய அதிர் வெடியைத் தூக்கி அவர் எதிர்பாராத விதத்திலே விட்டெறிந்தான். 'சீதை இல்லையென்றால் எனக்குக் கல்யாணமே வேண்டாம்' என்றான்.

மா.ஆ.பெருமாள் பிள்ளை போதித்தார். மிரட்டினார். முடிவாக, தம்மை நம்பியிருக்கும் யுவ யுவதியரின் மகிழ்ச்சியை விடத் தம்முடைய கெளரவம், அந்தஸ்து, பனத்தாசை முதலியனவே முக்கியம் என்று கருதுகிற ஒரு சில பெரியவர்களைப் போலவே திடமாக அறிவித்தார். 'எலே மகிழம்! இந்தப் பெருமாள் பிள்ளையை உனக்கு நல்லாத்