பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் போயின்? 121

மறுநாள் அழுகை நாளாகவே உதயமாயிற்று. இரவில் சினுசினுக்கத் தொடங்கிய தூறல் இடைக்கிடை பெரு மழையாகிப் பேயாட்டம் போட்டது. சற்று ஒயும். மீண்டும் சிணுங்கும். குளிர் குறையவே இல்லை. பகலின் விடிவும் அதே தன்மையில்தான் அமைந்தது.

'குழந்தைகள் எங்கே போனார்களோ என்ன ஆனார்களோ!' என்று ஆண்டாள் அம்மாளின் உள்ளம் பதைபதைத்தது. லட்சுமியின் பேதை மனம் காரணம் புரியாக் கலவரத்தாலும் சோகத்தாலும் கனத்துக் கிடந்தது.

காலம் ஊர்ந்து கொண்டிருந்தது.

பன்னிரண்டு - ஒரு மணி இருக்கலாம். மாடு மேய்க்கச் செல்லும் ஒருவன் ஒடோடி வந்து மாறியாடும் பெருமாள் பிள்ளையிடம் ஒரு சேதி சொன்னான் -

ஊருக்கு வெளியே சிறிது தள்ளி, ரயிலடிக்குப் பாதை வளைந்து செல்கிற இடத்தில், ஒரு குன்று இருந்தது. பாறை என்றும், பொத்தை என்றும், 'வெள்ளி மலை' என்றும் விதவிதப் பெயர் பெற்றிருந்த அவ்விடத்தில், 'குன்று தோறும் ஆடிடும் குமரன்' கோயில் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குன்றின் ஒரு பக்கம் செங்குத்தாக உயர்ந்து, கீழே பெரும் பள்ளம் உடையதாக இருந்தது. ஆபத்தான இடம் அது. மேலே நின்று வேடிக்கையாக எட்டிப் பார்த்து கால் வழுக்கி விழுந்தும், தற்கொலைத் திட்டத்தோடு செயல் புரிந்தும் ’பரலோக யாத்திரை' மேற்கொண்டவர்களைப் பற்றி எப்பொழுதாவது அவ்வூரார் பரபரப்படைய வாய்ப்பு கிட்டுவது உண்டு.

அந்தப் பள்ளத்தில் சின்ன ஐயாவும் சீதை அம்மாளும் விழுந்து கிடந்ததைத் தற்செயலாகக் காண நேர்ந்த மாடு மேய்ப்பவன் எதிர்ப்பட்டவர்களிடமெல்லாம் சொல்லியவாறே, பிள்ளைவாளிடம் வந்து சேர்ந்தான். விஷயமறிந்த பிள்ளையின் வாய் சொல்லிற்று, 'சவங்க எக்கேடும் கெடட்டும்' என்று. எனினும், அவர் இதயம் பதைத்தது; உடல் படபடத்தது. வண்டியும் ஆட்களுமாக அவர் அங்கே போய்ச் சேர்ந்தார். பலரும் பலவிதமாய்ப் பேசாமல் இருப்பார்களா? பேசினார்கள், பேசினார்கள்!

ரயிலுக்குப் போகிற போக்கில், மழைக்கு ஒதுங்கியபோது இருட்டில் தடுமாறி, கால் வழுக்கி பள்ளத்தில் விழுந்திருக்கலாம் அவனும் அவளும் என்று ஒரு கட்சி. இரண்டு பெரும் பேசி மனப்பூர்வமாகவே விழுந்திருப்பார்கள் என்பது எதிர்க்கட்சி.