பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

நோக்கம் எதுவாக இருந்திருப்பினும், விளைவு எதிர்பாராததாக அமைந்து கிடந்தது. மகிழ்வண்ணநாதனோ, சீதையோ உயிரற்ற கட்டையாய் மாறிவிடவில்லை. ஆனால் -

மாறி ஆடும் பெருமாள் பிள்ளையின் வயிற்றெரிச்சலுக்கும் மன எரிச்சலுக்கும் வித்து இங்குதான் ஊன்றப்பட்டது.

சீதையின் முதுகெலும்பிலே பலமான அடி. மகிழ் வண்ணனின் கால்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன.

இருவரையும் வீட்டுக்கு எடுத்து வந்து வைத்திய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார் பெருமாள் பிள்ளை. அவர் பொதுவாக நல்ல மனுசன்தான்; மனித உள்ளம் பெற்றவர் தான். பணத்தைத் தண்ணிராக வாரி இறைத்தார். ஆயினும், சீதை படுத்த படுக்கையிலேயே கிடக்க வேண்டியவளாகவும், மகிழம் நொண்டியாகவும் மாறுவதை எந்த வைத்தியமும் எவ்வளவு மருந்தும் தடுத்து நிறுத்த இயலவில்லை.

'பாவம்! இரண்டு பேரையும் இஷ்டம்போல் வாழ விட்டிருக்கலாம்’ என்று பிள்ளை அவர்களின் மனச் சாட்சி உறுத்தத்தான் செய்தது. அதை மறைப்பதற்காக அவர் உறுமுவதை மேற் கொண்டார்.

'என்ன காதலோ! என்ன சாதலோ! மனிதர்கள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிற விதத்தில் வாழவும் முடிவதில்லை. வாழத்தான் முடிவதில்லை, செத்துப்போகலாம் என்று ஆசைப்பட்டால் அது எப்படி சாத்தியமாகும்? தங்களுக்கும் தொல்லை; இருப்பவர்களுக்கும் தொல்லைதான்!

நிரந்தர நோயாளிகள் இரண்டு பேரை வைத்துக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவர் தலை மீது சுமந்து விட்டதனால்தான், மாறி ஆடும் பெருமாள் பிள்ளை சிடுசிடுக்கும் அண்ணாவியாகி விட்டார் என்று சிலர் சொல்வது வழக்கம். அந்தச் சுமையை அவரிடம் தள்ளிவிட்ட 'காதல்... காதல் போயின் சாதல்’ என்கிற விதி அவரைப் பித்தராய் - பேயராய் மாற்றுவதும் இயல்பாயிற்று. அவர் கோபம் கொள்வதில் நியாயமில்லை என்று தள்ள முடியுமா என்ன?