பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கொடுத்து வைக்காதவர்

சிலரைப் பற்றிக் குறிப்பிடுகிறபோது, 'அவனுக் கென்ன! கொடுத்து வைத்தவன்!' என்று சொல்வார்கள். திருவாளர் நமசிவாயம் அவர்கள் அவ்வாறு குறிப்பிடப்பட வேண்டிய அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவர் அல்லர். 'பாவம், கொடுத்து வைக்காதவர்' என்று தான் அவரை அறிந்தவர்கள் கூறுவார்கள்.

திருவாளர் நமசிவாயம் தமாஷாகச் சொல்லுவார்: 'நம்ம ஜாதக விசேஷம் அப்படி ஐயாவாள் ஒரு நிமிஷம் முந்திப் பிறந்திருந்தால் பெரிய சீமான் பேரனாக விளங்கியிருப்பேன். சொத்தும் சுகமும் சகல பாக்கியங்களும் பிறக்கும் போதே கிடைத்திருக்கும். எங்க ஊரிலேயே அப்படிப்பட்டவன், கொடுத்து வைத்தவன், ஒருவன் இருக்கிறான். நான் பிறந்தி அதே நாளில், ஆனால் நான் பிறந்த நேரத்துக்கு ஒரு நிமிஷம் முன்னாலே பிறந்தவன் அவன். அது தான் தொலைகிறது! நான் ஒரு நிமிஷம் தாமதித்தாவது பிறந்திருக்கப் படாதோ? அப்படி அவதரித்திருந்தால் நான் ஒரு சினிமா நட்சத்திரம் ஆகியிருப்பேன். புகழும் பணமும் ஆடம்பர வாழ்வும் எனக்கு வந்து சேர்ந்திருக்கும். அதுக்கும் நான் கொடுத்து வைக்கவில்லை!'

இதைக் கூறிவிட்டு அவர் அவுட்டுச் சிரிப்பு உதிர்ப்பார். அது விரக்தியும் வேதனையும் கலந்த சிரிப்பா? வாழ்க்கையின் அர்த்தமற்ற தன்மையையும், மனித நாடகங்களையும் வேடிக்கையாகக் கண்டு ரசிக்கக் கற்றுக் கொண்டவனின் நையாண்டிச்சிரிப்பா? அளவிட்டுச் சொல்ல முடியாதுதான்.

திருவாளர் நமசிவாயம் பிறப்பில் தான் 'கொடுத்து வைக்காதவர்' ஆகிவிட்டார் என்றால், வளர்ப்பு நிலையிலும் அவர் பிரமாத வாய்ப்புகளைப் பெற்றுவிட வாழ்க்கை உதவவில்லை.

அவர் பிறந்த சில மாதங்களிலேயே தாய் 'வாயைப் பிளந்து விட்டாள்'. அவள் விதி அப்படி! அதற்கு நமச்சிவாயம் என்ன செய்ய முடியும்? ஆனால், உறவினரும் ஊராரும் குழந்தையைத் தான் பழித்தார்கள். 'ஆக்கம் கெட்டது! பெத்தவளையே தூக்கித் தின்னுட்டு நிற்குது!’ என்றார்கள்.

அவர் தந்தை சுமாரான வாழ்க்கை வசதிகளைப் பெற்றிருந்தார். அவருடைய கஷ்ட காலமும் அவர் வாங்கிய கடன்களும்