பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124 வல்லிக்கண்ணன் கதைகள்

இருந்த சொத்துக்களை இழக்கச் செய்தன. அதற்கும் பையனின் துரதிர்ஷ்டம் தான் காரணம் என்று பலரும் பேசினார்கள்.

இந்த விதமாகப் பல சந்தர்ப்பங்களிலும், பலரும் சொல்லிச் சொல்லி, நமசிவாயத்துக்கே அவருடைய அதிர்ஷ்டம் கெட்ட தனத்தில் ஒரு நம்பிக்கையும் பற்றுதலும் படிந்து விட்டன. அவர் வாழ்வில் அவ்வப்போது குறுக்கிட்ட நிகழ்ச்சிகளும் அவருடைய அபிப்பிராயத்தை வலுப்படுத்தின.

'பணம் கட்டிப் பரீட்சை' என்றும் 'சர்க்கார் பரீட்சை' என்றும் முன்னோர்கள் பெருமையாகக் குறிப்பிட்டு வந்த எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சையில் நிச்சயம் பாஸ் செய்து விடுவோம் என்ற நம்பிக்கை நமசிவாயத்துக்கு இருந்தது. எல்லாப் பாடங்களையும் 'ஒரு கை பார்த்து' கேள்விகளுக்கு உரிய பதில்களை வெளுத்துக் கட்டி'யிருந்தார். ஆனாலும், பரீட்சையில் தேறியவர்களின் பட்டியலில் அவர் எண் இல்லாமல் போய்விட்டது.

அதற்காக நமச்சிவாயம் வருத்தப்படவில்லை. 'கொடுத்து வைத்தது அவ்வளவு தான்!' என்று அலட்சியமாக ஒதுக்கி விட்டார். அதிலும் தமாஷ் பண்ணுவதில் உற்சாகம் கண்டார்.

'பரீட்சைகள் மூலம் எவருடைய திறமையையும் எடை போட்டு விட முடியாது. பரீட்சையில் தேறியவர்கள் எல்லோரும் அற்புதப் புத்திசாலிகள் என்றும், பெயிலாகிறவர்கள் சுத்த மண்டூகங்கள் என்றும் எண்ணினால், அது அறியாமைதான். பரீட்சை விடைத் தாள்களைத் திருத்தி மார்க்குக் கொடுக்கிற அண்ணாத்தைகள் எல்லோருமே சரியாக எல்லாப் பேப்பர் களையும் வாசித்து நியாயமான மார்க்குகள் கொடுப்பதில் ஆர்வமும் அக்கறையும் காட்டுவதில்லை. எட்டாவது வகுப்பு படிக்கிற போது எனக்கு ஓர் அனுபவம் ஏற்பட்டது. ஒரு பரீட்சையில் நான் மிகவும் சரியான விடைகளையே எழுதியிருந்தேன். எப்பவுமே 'நான் பிரைட் ஸ்டுடன்ட்' தான். ஆனால், எனக்கு இருபத்து மூன்று மார்க்குகள் தாமே கொடுக்கப்பட்டிருந்தன. மண்டுவான ஒரு பையன், தப்பும் தவறுமான விடைகள் எழுதியிருந்தவன், எழுபது மார்க்குகள் வாங்கியிருந்தான். பல மாணவர்களுக்கும் இது அதிசயமாகவே பட்டது. அதனால் ஸார்வாளிடமே இரண்டு பேப்பர்களையும் காட்டி, இது எப்படி ஏன் என்று கேட்டார்கள். அவர் என் தாளில் உள்ள பதில்களைப் படித்துப் பார்த்தார். 'அடடே, ரொம்பவும் சரியாக இருக்குதே என்றார். பிறகு, மறுபடி கவனித்து மார்க்குகள் கொடுத்தார். எனக்கு எண்பத்தைந்து மார்க்கு வந்தது. இன்னொரு பையனுக்கு, பதினெட்டு மார்க்குக் கூடக்