பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130 வல்லிக்கண்ணன் கதைகள்

செய்தவை என்று அவள் நம்பினாள். பின் என்ன? அப்பொம்மைகள் நவம் நவமான ஸாரிகளை - விலை உயர்ந்த ஆடைகளை - அழகும் கவர்ச்சியும் நிறைந்தவற்றை நாள் தோறும் கட்டிக் கொள்ள முடிகிறதே! ஒரே நாளில் அநேக தடவைகள் டிரஸ் மாற்றம் செய்யவும் முடிகிறதே! தனக்கு ஒன்றிரண்டு அழகான ஸாரி, நாகரிகப் புடவை கூட இல்லையே...

இந்த விதமாக எண்ண ஆரம்பித்தால் தான், சொக்கம்மா முகத்தில் வாட்டம் படரும். இல்லாது போனால், அவள் முகம் ரோஜாப்பூ தான்.

சந்தேகமில்லை. சொக்கம்மா பூச்செண்டு தான். கதம்பக் கொத்து. மலர்த் தோட்டம் என்றே சொல்லி விடலாம்.

பக்கத்து வீட்டில் குடியிருந்த சுந்தர மூர்த்தி அப்படித்தான் சொன்னார். அவளிடமே சொன்னார்.

சொக்கம்மா ஒரு நாள் புது வாயில் புடவையும், எடுப்பான ஜாக்கெட்டும் அணிந்து, அந்த வனப்பிலும் அது தந்த ஆனந்தத்திலும் 'ஜம்மென்று' விளங்கினாள். அவளது கண்ணாடி சொன்ன புகழ்ச்சி மட்டும் அவளுக்குப் போதுமானதாக இருக்கவில்லை. அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமெல்லாம், ‘எப்படி இருக்கு? புடவை நல்லாயிருக்குதா? எனக்குப் பொருத்தமா இருக்குதா?’ என்று கேட்டு, கிடைக்கிற பாராட்டுரைகளை ஏற்று, குதுகலம் அடைந்து கொண்டிருந்தாள். சுந்தரத்திடமும் கேட்டு வைத்தாள்.

'ஜோராக இருக்கு. நீயே ரோஜாப்பூ மாதிரி அருமையாக இருக்கிறே!' என்றார் அவர்.

பொதுவாகவே புகழ்ச்சி பெண்களுக்கு மிகவும் உகந்ததாகவும் இனியதாகவும் அமைகிறது. அந்தப் புகழ்ச்சி ஆணின் வாய் மொழியாக வருவது பெண்ணுக்கு மிகுதியும் பிடிக்கும். சொல்லும் திறமை பெற்றவர்கள், சொல்ல வேண்டிய நேரத்தில், சொல்லக் கூடிய விதத்தில் சொல்கிற போது அவள் கிறங்கி விடுகிறாள். சொக்கம்மாளும் பெண் தானே!

அவள் உள்ளத்தில் தேன் நிறைந்தது. முகத்திலே மகிழ்வு மலர்ந்தது. அதனால் அழகிய புஷ்பத்தின் மீது வெயிலின் பொன்னொளி பாய்ந்தது போலாயிற்று.

சுந்தரமூர்த்தி அதை ரசித்து வியந்தார். 'ஆகா, எவ்வளவு அழகு! உன்னை வெறும் பூ என்று மட்டும் சொன்னால் போதாது. அழகு அழகான பூக்கள் பூத்துக் குலுங்கும் பூந்தோட்டம் என்றே சொல்ல வேண்டும்..'