பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெயிலும் மழையும் 131

அவர் பேசப் பேச, சொக்கம்மாளுக்கு இனிமையான பன்னீரை அள்ளி அள்ளி மேலெல்லாம் தெளிப்பது போன்ற சுகம் ஏற்பட்டது. வெட்கமும் வந்தது. 'சும்மா இருங்க. கேலி பண்ணாதீங்க' என்று முனு முணுத்தாள்.

'கேலி இல்லே, சொக்கம்மா. நிசமாகத் தான் சொல்கிறேன்’ என்று சுந்தரம் கூறிய விதம் அவளுக்கு நம்பிக்கை ஊட்டுவதாகத் தான் இருந்தது.

அது முதல் அவள் சுந்தரமூர்த்தியின் புகழ் மொழிகளையும் இனிய பேச்சுகளையும் கேட்பதில் ஆர்வமும் ஆசையும் அதிகம் கொண்டாள். அடிக்கடி அவர் வீட்டின் அருகே வளையமிட்டாள். வலிய வலியப் பேச்சுக் கொடுத்தாள்.

சுந்தரம் அவள் போக்குகளை ஆதரித்ததோடு, வளரவும் வகை செய்தார். ஏதோ ஒரு கம்பெனியில் என்னவோ ஒரு வேலை அவருக்கு. தனியாகத்தான் இருந்தார். ஒட்டலில் சாப்பாடு. வறண்ட பொழுதுகள் நிறைந்த அவரது வாழ்க்கையில் இனிமை நிரப்புவதற்குப் பெண் துணை எதுவும் கிட்டியதில்லை. எனவே, சொக்கம்மாளின் சிரிப்பும் பேச்சும், வருகையும் போக்கும், அவருக்கு இனிய நிகழ்ச்சிகளாக விளங்கின. -

ஒரு நாள் அவள் கேட்டாள், 'ராசா மகளே, ரோசாப்பூவே என்று பாடுகிறார்களே. ராசாமகள் அப்படித்தான் இருப்பாளோ?' என்று.

'ராசா மகள் என்ன! நீயே ரோஜாப்பூ தான். நான் தான் அடிக்கடி சொல்கிறேனே. ரோஜாப்பூவைப் பார்க்கிற போதெல்லாம் எனக்கு உன் நினைப்பு தான் வருகிறது' என்று சுந்தரம் சொன்னார்.

'இன்று நான் வருகிற வழியில் ரோஜாப்பூ விற்றார்கள். நானும் அஞ்சாறு பூ வாங்கி வந்தேன். அழகான பூக்களைப் பார்த்துக் கொண்டிருப்பதில் எனக்கு எப்பவுமே ஆசை உண்டு. உன் தலையில் சூடிக் கொண்டால் உன் அழகும், பூவின் அழகும் இன்னும் அதிகமான கவர்ச்சி பெறும்' என்றும் கூறினார். அவளிடம் ஒரு பூவைக் கொடுத்தார்.

சந்தோஷத்துடன் அதை வாங்கிக் கூந்தலில் சொருகிக் கொண்ட சொக்கம்மா, 'நன்றாக இருக்குதா? ஊம்ங்?' என்று குழைவுடன் கேட்டாள்.

'ஜோர். வெகு அருமை!’ என்று அவர் அறிவித்ததும், ஐஸ் க்ரீம் சாப்பிட்டது போலிருந்தது அவளுக்கு. -