பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 வெயிலும் மழையும் 133

அவளை ஆட்கொண்டது. நாணம் மீதுற அவள் அங்கிருந்து ஒடிப்போனாள்.

தனது புது அனுபவத்தை - இதயத் துடிப்புகளை யாரிடமாவது சொல்லி, எண்ணி எண்ணிப் பார்த்து, மகிழ்வுற வேண்டும் என்று வந்தது அவளுக்கு. ஆனால் யாரிடம் சொல்ல முடியும்? அந்தப் பழைய கண்ணாடி தான் அவளுக்குத் துணை. அதில் தன்னையே கண்டு, தனது உணர்வுக் கிளர்ச்சிகளுக்கு விளக்கமும் விடையும் காண முயல்வதே அவளது வழக்கமாகி விட்டது.

வெயிலில் நின்று இதமான அனுபவம் பெறும் ஆசை சொக்கம்மாளுக்கு இல்லாமல் போகுமா? சுந்தரத்தின் பேச்சு, பார்வை, சிரிப்பு முதலியவற்றை அடிக்கடி அனுபவிக்க வேண்டும் என்ற தவிப்பைத் தான் அவள் அடக்க முடியுமா?

'வயது வந்த பெண் இப்படி ஒரு ஆண் பிள்ளையோடு பேசுவதும் சிரிப்பதும் விளையாடிப் பொழுது போக்குவதும் நன்றாக இல்லை' என்று அக்கம் பக்கத்தினர் பேசலானார்கள். 'பெரியவளாகி விட்ட பெண்ணுக்குக் கொஞ்சமாவது அடக்கம் ஒடுக்கம் வேண்டாம்? நீயாவது உன் மகளை கண்டித்துவை, சீதை' என்று உபதேசமும் செய்தார்கள்.

சீதை அதைப் பெரிது படுத்தவில்லை. அவளுக்குத் தன் மகளிடம் நம்பிக்கை இருந்தது. தனது மகள் தவறான காரியம் எதையும் செய்யமாட்டாள் எனும் அகந்தையும் இருந்தது. எனினும், மற்றவர்கள் சொல்வதை மகள் காதிலும் போட்டு வைத்தாள் அவள்.

சொக்கம்மா சிரித்தாள். 'அவர்களுக்கு வேலை என்ன!' என்று ஒதுக்கி விட்டாள்.

ரு நாள் சுந்தரம் அழகான புது மாடல் நெக்லேஸ் ஒன்றைச் ச்ொக்கம்மாளிடம் காட்டினார். அவள் சிறுமி போல் வியப்புடன், 'அய்யா! அருமையாக இருக்கிறதே? ஏது?’ என்று கேட்டாள்.

"வாங்கி வந்தேன். உனக்காகத்தான்’ என்று கூறி அவள் கையில் வைத்தார் அவர்.

அவள் ஆர்வத்தோடு அதைக் கழுத்தில் அணிந்து கொண்டாள். முகமெலாம் உவகையின் மலர்ச்சி. அந்த அறையில் கிடந்த கண்ணாடியில் பார்த்தாள். 'நல்லாயிருக்குது. இல்லே? நீங்க சொல்லுங்க. எப்படி இருக்குது?’ என்று துடிப்போடு விசாரித்தாள். .