பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

காரினுள் செளகரியமாக அமர்ந்து, கார் புறப்பட்டு வேகமாக ஒடவும், அவர் நிம்மதியாக மூச்சு விட்டார். 'அகிலாண்ட நாயகி எல்லாம் உன் கிருபை' என்று அவர் மனம் பேசியது.

அப்போதும் குறும்பும் பரிவும் அருளும் கலந்த புன்னகை யோடு அவரையே பார்த்த அன்னையின் திருமுகம் அவர் உள்ளத்தில் பளீரென்று நிழலிட்டு மறைந்தது. 'அம்மா அகிலாண்டநாயகி, உன் அருள்' என்று மனசுக்குள் கூறிக் கொண்டார் அவர்.

ராமலிங்கம் இப்படி ஆத்ம பூர்வமாக அடிக்கடி எண்ணிக் கொள்ள வேண்டிய அவசியம் அந்தப் பிரயாண முடிவிலேயே நேரிட்டது.

அந்தக் கார் அடையவேண்டிய நகரை உரிய காலத்தில் அடைந்தது. அதில் வந்த பயணிகளுக்கு ஒரு பரபரப்பான செய்தி அங்கே காத்திருந்தது.

ராமலிங்கமும் மற்றவர்களும், காலம் துணைபுரிந்திருந்தால் ஏறி பயணம் செய்திருக்கக் கூடிய - செய்திருக்க வேண்டிய - எக்ஸ்பிரஸ் ரயில் இடை வழியில் ஒரு இடத்தில் தண்டவாளம் பெயர்ந்து, தடம் புரண்டு, விபத்துக்கு உள்ளாகியிருந்தது. என்ஜினும் அதை அடுத்த இரண்டு பெட்டிகளும் கவிழ்ந்து விழுந்து விட்டன. பல பேர் செத்துப் போனார்கள்: ஏகப்பட்ட பேருக்கு பலத்த அடி, காயம். ! -

இதைக்கேட்ட ராமலிங்கத்தின் உள்ளத்தில் இனம்புரியாத உணர்ச்சி ஒன்று பொங்கிப்பிரவாகித்தது. அதில் ஆனந்தமும், 'அம்மா நாம் பிழைத்தது பெரிய அதிர்ஷ்டந்தான்' என்ற நிம்மதியும் கலந்திருந்தன. அதற்கெல்லாம் மேலாக தேவியின் திருவருள்தான் நம்மை காப்பாற்றியிருக்கிறது என்ற பரவசமும் இணைந்து ஒலித்தது. அன்னையின் குறும்புத்தனமும் பாசமும் பிரியமும் நிறைந்த புன்னகை இப்பவும் அவர் கண்முன்னே களிநடம் புரிவதுபோன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது.

'அம்மா அகிலாண்டநாயகி...' வேறு எதுவும் கூறமுடியாத உணர்ச்சித் தழுதழுப்புடன் அந்த இடத்திலேயே கரம் குவித்து வணங்கினார் ராமலிங்கம்.

('கலா வல்லி, தீபாவளி மலர் - 1981)