பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

338 வல்லிக்கண்ணன் கதைகள்

அவளும் அவனை விளையாட்டாகவும், ஈடுபாட்டுடனும் பார்த்திருக்கிறாள். ஜன்னலின் உட்புறத்தில், அல்லது வராந்தாவில் உள்ள மாடிப்படிமீது உட்கார்ந்திருப்பாள். அநேகமாக, ரோஸ் கலர் பட்டு அல்லது பச்சை நிறப்புடைவை - அழுத்தமான வர்ணமுடைய பட்டாடைதான் - கட்டியிருப்பாள். 'இவள் முகம் பம்ப்ளிமாஸ் பழம் மாதிரி இல்லாமல் இருக்குமானால், மூக்கு கொஞ்சம் நீளமாக இருந்திருக்குமானால், இவள் அழகு இன்னும் சோபிக்கும்’ என்று அவன் எண்ணுவது உண்டு.

இன்னொரு அக்காள் இருக்கிறாளே, அவள் சுவாரஸ்யமான 'கேரக்டர். சரியான கன்னங்களும் எடுப்பான மூக்கும், சின்னஞ் சிறு வாயும், அழகு தரும் தங்க விளிம்புக் கண்ணாடியும், ஒல்லியான தோற்றமும் கொண்ட அவள், அவன் பார்க்க நேரிட்ட வேளையில் எல்லாம் கறுப்பு நிறப் பட்டாடையில் தான் காட்சி தந்தாள். கரையும், தலைப்பும் மாறி இருக்கலாம். கலர் என்னவோ எப்பொழுதும் கறுப்புத்தான். அது அவளுக்கு அமைவாகவும் இருந்தது.

அவள் சோகமுலாம் பூசிய சித்திரமாகத் திகழ்ந்தாள். அவள் கண்களின் ஆழத்திலே இனம் கண்டு கொள்ள முடியாத ஏதோ ஒரு சோகம், கோயில் கர்ப்பக் கிருகத்தின் ஒளி விளக்குப் போல, மினுமினுத்துக் கொண்டிருந்தது. அவள் முகம் காலை ஒளியில் குதுகலிக்கும் புது மலர் போல் மிளிர்வதை அவன் ஒருபோதும் கண்டதில்லை. மாலை நேரத்தில் சற்றே வாட்டமுற்றுக் காணப்படும் அழகுப் பூ அந்திப் பொன் வெயிலில் மினுமினுப்பது போல், சோகமயமான வசீகரத்தோடு தான் அவள் வதனம் சதா காணப்படும். அவள் ஓயாது படித்துக்கொண்டிருப்பாள். புத்தகமும் கையுமாகக் காணப்படாத வேளைகளில் பிரமாத சிந்தனையில் ஆழ்ந்திருப்பவள் போல் தென்படுவாள்.

அவளையும் அவன் அடிக்கடி பார்த்திருக்கிறான். அவள் பஸ்ஸிலிருந்து இறங்கி வரும்போது - பஸ்ஸுக்காகக் காத்து நிற்கையில் - ஓடும் பஸ்ஸின் ஓர் ஓரத்தில் - நடைபாதையில் எதிரே - எந்தெந்த நேரத்தில் எல்லாமோ அவளை அவன் பார்க்க முடிந்திருக்கிறது. வீட்டிலும், அவள் தனிமையில், தானும் தனது எண்ணங்களுமாய் உட்கார்ந்திருப்பதைக் கவனித்திருக்கிறான். அப்பொழுதெல்லாம் அவளது நீளிமைகள் மேலேறி, விழிகள் விசாலமாகி, பார்வை அவன் முகத்தைத் தொட்டு, மீண்டும் மைச் சிமிழ் மூடிக்கொண்டது போல் இமை தணிந்து கொள்வதையும் கவனித்திருக்கிறான்.

அம்மூன்று பெண்களையும் பார்த்து ரசிப்பதனால் அவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. 'அழகுக் காட்சிகளைக் காண்பதில் என்ன தவறு?'