பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யாரைக் காதலித்தான்? 139

பார்ப்பது குற்றமற்ற பொழுது போக்கு என்ற தன்மையில்தான் அவன் அவர்களைப் பார்த்து வந்தான். அவர்களும் ரசித்துப் பார்த்து மகிழ்ந்ததனால் அதன் சுவையும் அதிகப் பட்டது. அவ்வளவுதானே தவிர, 'லவ்' என்கிற எண்ணமே அவனுக்கு எழுந்ததில்லை. அதாவது, பெரியக்காள் குரல் கொடுக்கிற வரை!

- இம்மூவரில் யார் மீது எனக்கு ஆசை? மூவர்மீதும் ஆசை உண்டு என்றால், யார் பேரில் அதிகமான ஆசை? இதுவரை யார் மீதும் லவ் ஏற்படவில்லை என்றால், இனி இம் மூவரில் யாரை லவ் பண்ணலாம்?... இந்த விதமான எண்ண அலைகள் மோதலாயின.

அப்பெண்களும் அவனைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும். பேச விரும்பாத எண்ணங்களை ஒவ்வொருவரும் தனிமையில் வைத்து மனம் பாண்டி ஆடிக் களித்திருக்க வேண்டும். இது அவர்கள் செயலிலிருந்து நன்கு புலனாயிற்று.

பெரிய அக்காள் விளையாட்டாகப் பேச்சு ஒலிபரப்பிய தினத்துக்குப் பிறகு, ஒவ்வொரு நாளும் அம்மூவரும் சந்திரனின் வருகையை ஆவலோடு எதிர்நோக்கிக் கார்த்திருப்பதும், அவன் தூரத்தில் வரும்பொழுதே எவளேனும் ஒருத்தி 'அவர் வாறார்' என்று குரல் கொடுப்பதும், உடனேயே அவர்கள் தத்தமக்கு வசீகரமான இருக்கை நிலை என்று படுகிற போஸில் உட்கார்ந்து கொலு பொம்மைகள் போல் காட்சி கொடுப்பதும் சகஜமாயின. அவன் போகிறபோதே அவர்களைப் பார்ப்பான். ஒவ்வொருவர் முகத்தையும் அவன் கண்நோக்கு தொடும். அவர்கள் கண்கள் தனித்தனியே அவன் பார்வையோடு உறவாடும். மற்றப்படி எவ்விதமான சலனமுமிருக்காது. அவன் போவான், அவர் களைத் தன் எண்ண ஊசலில் வைத்து இஷ்டம்போல் ஆடவிட்டபடி அவர்கள் இருப்பார்கள் - அவனைப் பற்றிப் பேசியும், பேச விரும்பாத நினைவுகளை எண்ணத்திலிட்டுத் தாலாட்டி மகிழ்ந்தும் பொழுது போக்கியபடி.

சிலசமயம் மூவரில் ஒருத்தி மட்டுமே காணப்படுவாள். அப்பொழுது அவள் அதிக ஈடுபாட்டுடன் பார்ப்பதாக அவனுக்குத் தோன்றும்.

பெரியவள் கண்களில் விஷமம் ஒளிரிடும். அவள் இதழ்க் கடையில் சிறுசிரிப்பு சுழியிடுவதுபோல் தோன்றும். அவள் சிரிக்கிறாளா இல்லையா என்று தீர்மானிகிக இயலாது அவனால். 'நாமும் பதிலுக்குச் சிரித்து வைக்கலாமே' என்ற ஆசை குமிழ்விடும். சங்கோஜம் அதன் மண்டையிலடித்து ஒடுக்கும்.