பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140 வல்லிக்கண்ணன் கதைகள்

சின்ன அக்காள் 'ஸீயஸ் திங்கர்' போல்தான் பார்த்திருப்பாள். கண்களில் சிறு பொறியும், கன்னங்களில் ஒரு வர்ணமும், முழு முகத்தின் தனி மலர்ச்சியும் பார்ப்பதிலும் பார்க்கப் படுவதிலும் அவளுக்கு மகிழ்ச்சியே என்பதை விளம்பரப்படுத்தும்.

கனவு காண்பது போன்ற கண்களை உடைய சிறு பெண் நேராகவே பார்த்து, அழகாகப் புன்னகை புரிவதை வழக்கமாக்கிக் கொண்டாள். அவன் தன்னைத் தான் பார்க்கிறான் . தன்னை மட்டுமே பார்த்து மகிழ்கிறான் - என்ற நம்பிக்கை அவளுக்கு. அதனால், அவள் அவன் வரும் பாதையில் எதிர்ப்பட நேர்ந்தால், அவனுக்கு நேர் எதிராக நடந்து வந்து, அருகுற்றதும் அவனைக் கண்ணினால் தீண்டி சிறிது விலகி அவனுக்குச் சமீபமாக நடந்து போவாள். அவள் திரும்பிப் பார்ப்பாள் என அவன் உள்ளம் சொல்லும். அவள் திரும்பி நோக்குகிறாளா என்று கவனிக்கும்படி அவன் உணர்வு தூண்டும். அவள் உள்ளமும் உணர்வும் அவ்வாறே பேசித் தூண்டிவிடும் போலும்! அவன் திரும்புகிற அதே நேரத்தில் அவள் முகமும் திரும்ப, கண் பார்வைகள் மோத, உதட்டிலே ஆனந்தச் சிரிப்புத் துள்ளும். அவளைப் பொறுத்தமட்டில், அவளுக்குச் சந்தேகமே கிடையாது - அவன் அவளைத்தான் காதலிக்கிறான் என்பதில்.

சந்திரன் உள்ளம் அப்படிச் சொல்லவில்லையே! நாட்கள் ஒடிக்கொண்டிருந்தன. 'குற்றமற்ற பொழுது போக்கு' இனிமையாக வளர்ந்து கொண்டுதாணிருந்தது. வெறும் பார்வையோடு அது நின்றதே தவிர, உரையாடல் எனும் அடுத்த கட்டத்தைத் தொட முயலவில்லை அவர்கள் உறவு.

சில சமயங்களில், பெண்கள் - அவர்கள் மூன்றுபேர் இருந்தது மிகச் செளகரியமாக இருந்தது - அவன் வருவதைக் கண்ட உடனேயே ஒருவரை ஒருவர் பார்த்து கிண்கிணி ஒலி ஆர்க்கும் சிரிப்பைக் கொட்ட முடிந்தது. சிலவேளை, பெரியவள் சிரிப்பை உதிர்ப்பாள். இரண்டாமவள் புன்னகை புரிவாள். தங்கச்சி வெட்கத்தோடும், களிப்போடும் 'உகுங்... குகுகூங்’ என்று மணிப்புறாச் சிரிப்பை நழுவவிடுவாள்.

அவனைப் பார்த்துவிட்டு, அவர்கள் தங்களுக்குள் பார்வை பரிமாறி இப்படிச் சிரிப்பதனால், இச் சிரிப்பின் அர்த்தம்தான் என்ன?’ என்ற ஐயம் அவனுக்கு எழ வகை ஏற்பட்டது. 'கேலி செய்கிறார்கள் போலும்!’ என்று அவன் மனம் கருதியது.

அவர்கள் கேலியாகச் சிரித்தால்தான் அவன் என்ன செய்ய முடியும்? அவனும் யாராவது நண்பனோடு போனால்,