பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யாரைக் காதலித்தான்? 141

நண்பனை பார்த்துச் சிரிப்பதுபோல் சிரிக்கலாம். அவனோடு பேசுவதுபோல், கிண்டலாக ஏதேனும் சொல்லலாம். ஆனால், எப்போதும் அவன் தனியாகத்தானே போய் வந்துகொண்டிருந்தான்! 'ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்று அவர்களைப் பார்த்துக் கேட்க முடியுமா? 'அயோக்கியன்! வீட்டுத் திண்ணையிலிருக்கும் பெண்களோடு வம்பாட முயலும் வீணன்' என்று அவர்களும் மற்றவர்களும் சண்டைக்கு வந்து விடுவார்களே? தனியாகத் தானே பதிலுக்கு அவர்களைப் பார்த்துப் பல்லிளித்துப் பழிப்புக் காட்டலாம். 'பைத்தியம்! குரங்கு!’ என்று அவர்கள் பரிகசிக்கக் கூடுமே! ஆகவே, அவன் மெளனமாக நடக்கும் இயல்பையே அனுஷ்டித்து வந்தான்.

ரு நாள் பகலில், மூவரில் இளையவள் வீட்டுக்குள்ளிருந்து ஒடிவ்ந்தாள். அவசரமாகப் படிகளில் தாவி, தெருவில் குதித்த சமயத்தில் சந்திரன் அவளுக்கு நேரரே வர நேர்ந்தது. அவன் வேகமாக விலகிக் கொண்டான். இல்லையெனில், அவள் அவன்மீது மோதியிருப்பாள். அவளுக்கு வெட்கமும் குழப்பமும் ஏற்பட்டன. அவன் சிரித்துக்கொண்டே போய்விட்டான்.

அன்று சந்திரன் மறுபடியும் அவ்வீதி வழியே போகும் போது, அம்மூன்று பெண்களும் கொலுவிருப்பார்கள் என்று எதிர்பார்த்தான். ஏமாறவில்லை. அவன் எதிர் பாராததும் நிகழ்ந்தது.

தங்கச்சி அன்றைய நிகழ்ச்சியை அக்காள்களிடம் சொல்லியிருக்க வேண்டும். சந்திரன் அருகே வரவும் அவள் தலையைத் தாழ்த்தி, கடைக்கண்ணால் பார்ப்பதில் ஆர்வம் காட்டினாள். சின்ன அக்காள் அவன் முகத்தில் விடுபடாத எந்தப் புதிருக்கோ விடை தேடுவதுபோல், கூரிய பார்வையை பதித்தாள். பெரிய அக்காள் சிரித்துக் கொண்டே, 'பேசேண்டி, கலா. வாய் திறந்துதான் பேசேன்!' என்று தங்கச்சியைச் சீண்டினாள். சின்னவள் முகம் சிவக்க, கைவிரல்களால் கண்களை மூடிக் கொண்டாள். அவ்வளவு நாணம்!

'கலாவா இவள் பெயர்? ஆகவே, ஒருத்தி பெயர் தெரிந்துவிட்டது' என்று மகிழ்வுற்றான் சந்திரன். மற்றவர்கள் பெயரை அறிவது எப்படி? அவன் பெயரை அவர்களுக்கு அறிவிப்பதுதான் எவ்வாறு? பரஸ்பரம் அறிமுகம் செய்து வைப்பதற்குத் தோழியோ, தோழனோ இல்லையே!

'நான் இவர்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசித்தால், இவ்வளவு கஷ்டமோ கவலையோ ஏற்படாது, அவர்களாகவே அறிமுகம் செய்துகொள்வார்கள். படிப்பதற்குப் பத்திரிகை