பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யாரைக் காதலித்தான்? 143

காலத்துக்கே இது பொறுக்கவில்லை போலும். இதில் ஒரு சுவையான திருப்பம் காண அது ஒரு சந்தர்ப்பத்தைச் சிருஷ்டித்து விட்டது.

ஒருநாள், வழக்கம்போல் அந்த வீதி வழியே சந்திரன் வருகின்ற வேளையில் அவ்வீட்டு வராந்தாவில் மூன்று பெண்களும் இருந்தார்கள். அதிகப்படியாக வேறு ஒரு பெண்ணும் இருந்தாள். இவள் சின்ன அக்காளின் சிநேகிதியாக இருக்கலாம். ஆனால் அவளைவிட உற்சாகம் மிகுந்தவளாக - துள்ளலும் துடிப்பும் நிறைந்தவளாக அடிக்கடி மணிச் சிரிப்பைச் சிந்துபவளாகக் காணப்பட்டாள்.

'வனஜா, இப்போ ஒரு வேடிக்கை பாரேன்!' என்றாள் பெரியவள்.

‘என்ன வேடிக்கை?' என்று அவள் ஆவலாக விசாரித்தாள்.

'அதோ வருகிறாரே...'

அக்காள் தன்னைப் பரிகாசம் செய்யப் போகிறாள் என்று பயந்த கலா, 'அக்கா உஸ்ஸ்!' என்று ஒற்றை விரலால் வாயை மூடிச் சைகை செய்தாள்.

அதற்குள் சந்திரன் அருகே வந்துவிடவும், அவர்கள் பேச்சு தடைப்பட்டுவிட்டது. அவன் ஒவ்வொருவர் முகத்திலும் விழி பதித்தவாறே மெதுவாக நடந்தான். அவர்களும் அவனைப் பார்த்தார்கள். பெரியவள் உரக்கச் சிரித்தாள். உடனே அவள் சகோதரிகளும் சிரிப்பை இணைய விட்டார்கள். புதிய தோழி சிரிக்காமல், ஒன்றும் புரியாதவளாய், அவனை வியப்போடு கவனித்தபடி இருந்தாள்.

அவன் சிறிது நகர்ந்ததும் அவள் கேட்டாள், 'ஏன் ஜானகி சிரித்தாய்?' என்று. பதில் எதுவும் கிடைக்காததால், 'சாவித்திரி, உங்க அக்கா ஏண்டி இப்படிச் சிரிக்கிறா? ஏன் என்ன விஷயம்?" என்று விசாரித்தாள். -

அவள் பேச்சு சந்திரன் காதுகளில் நன்றாக விழுந்தது. 'ஒகோ, பெரியவள் பேர் ஜானகியா? கண்ணாடிக்காரி தான் சாவித்திரி போலிருக்கு என்று அவன் நினைத்தான். இவ்வளவு நாட்களுக்குப் பிறகு அவர்கள் பெயரை அறிந்துகொள்ள முடிந்ததில் அவனுக்கு ஆனந்தமே ஏற்பட்டது.

ஆயினும் ஒரு வேதனையும் எழுந்தது. 'அவர்கள் ஏன் அப்படிச் சிரிக்கிறார்கள்? என்னைக் கேலி செய்யும் விதத்திலா? அல்லது சும்மா விளையாட்டாகத்தானா?' என்று அவன் மனம் வருத்தப்பட்டது. பெரியவள் தன்னைப் பற்றித் தங்கள்