பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144 வல்லிக்கண்ணன் கதைகள்

சிநேகிதியிடம் கிண்டலாகப் பேசிக் களைப்படைவதை அவனால் கற்பனை பண்ண முடிந்தது. அதனால் அவன் உள்ளம் கனன்று, 'மூதேவிகள் தெருவில் உட்கார்ந்து சிரிப்பு வாழுதோ?’ என்று முணுமுணுத்தது.

அவர்களோடு பேசி, அவர்களில் ஒருத்தியைக் காதலிப்பதாகக் காட்டிக்கொண்டிருந்தால் அவர்கள் இவ்வாறு நடந்திருக்கமாட்டார்கள் என்றும் சந்திரன் எண்ணினான். இப்போது கூட அவனால் தீர்மானிக்க முடியவில்லை, யார்மீது அவனுக்கு ஆசை என்று. காதலிப்பது என்றால் அம் மூவரில் யாரைக் காதலித்து அவன் கல்யாணம் செய்துகொள்ள விரும்புவான்? தெரியாது... தெரியாதுதான். திடீரென்று மூன்றுபேரும் பேசித் திட்டமிட்டுக் கொண்டு, சேர்ந்து அவன் முன் நின்று எங்களை இவ்வளவு காலமாக ஆர்வத்தோடு பார்த்து வருகிறீர்களே; எங்களில் யார்மீது உங்களுக்கு ஆசை? என்று கேட்கத் துணிந்திருந்தால், அவனுடைய பதில் முழித்தல்' ஆகத்தான் இருக்கும்!

மூன்று பேரும் அழகாகத்தான் காட்சி அளித்தார்கள். மூவரைப் பார்க்கும் போதும், மூன்றுபேரைப் பற்றி மொத்தமாகவும் தனித்தனியாகவும் எண்ணும் போதும், இன்பம் அவன் உள்ளத்தில் கொப்பளித்துப் பாயத்தான் செய்தது. அதற்காக மூன்று பேர் மீதும் அவனுக்குக் காதல் என்று சொல்லிவிட முடியுமா? ஒருவன் மூன்று பெண்களை ஒரே சமயத்தில் காதலிக்க முடியுமா?

இத்தகைய விசித்திரமான கேள்விகள் அவன் சிந்தனையில் அலைபாய்ந்த போதிலும், அவற்றுக்கான சரியான விடையைக் கண்டாக வேண்டிய அவசியம் எதுவும் அவனுக்கு ஏற்படவேயில்லை. அதற்கு மாறாக, அவனுடைய மனக்குழப்பத்தைத் தீர்ப்பதற்கு ஒரு சுலபவழி தானாகவே ஏற்பட்டு விட்டது.

மறுநாள், பஸ் நிற்குமிடத்தில் சந்திரன் வனஜாவைப் பார்க்க நேர்ந்தது. அவள் 'ரொம்பவும் தெரிந்தவள் போல' அவனை நோக்கிப் புன்னகை பூத்தாள். அதற்கு அடுத்த நாள் அவன் ரஸ்தாவில் நடந்து வரும்பொழுது, தற்செயலாக வனஜாவும் வரநேரிட்டது. அவள் மறுபக்கம் போகவில்லை. முன்னே பின்னே செல்ல விரும்பவுமில்லை. தள்ளி நடக்கவுமில்லை. அவன் கூடவே வருகிறவள் போல, அவனுக்கு அருகிலேயே நடந்து வரலானாள். அவளுக்குச் சிரிப்பு அள்ளிக்கொண்டு வந்தது. ஆனால் அவள் வாய்விட்டுச் சிரிக்கவில்லை. அவன் திரும்பி அவளை நோக்கும்போது, அவள் தரையைப் பார்த்தாள்; அல்லது நேரே நோக்கினாள். 'இவள் ஒரு